கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 10 மே, 2011

யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து பொலிஸார் விலகல்:கைதுசெய்யப்பட்ட மாணவர் தடுத்து வைப்பு


யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற மோதலையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் அங்கிருந்து விலக்கப்பட்டுள்ளனர். எனினும், மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டமைக்கு மாணவர் தரப்பில் எதிர்ப்புக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை(07-05-2011) அன்று முகாமைத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு தொடர்பாக 2ம், 3ம் வருட மாணவர்களிடையே நடைபெற்ற மூர்க்கமான மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் பல்கலைக்கழத்துக்குள் நுழைந்தனர்.

பொலிஸாரைக் கண்டு ஓடியதாகக் கூறப்படும் சில மாணவர்களின் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை எடுத்துச் சென்ற பொலிஸார், அதனை மீட்கச் சென்ற இரண்டு மாணவர்களை மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர்.

இவர்கள் நேற்றையதினம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டிருக்கும் மாணவர்களில் ஒருவர் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர் என்றும், முகாமைத்துவ பீட மாணவர்களின் பிரச்சினைக்கும் இவருக்கும் சம்பந்தமெதுவும் கிடையாது என்றும் தெரிவித்த அவர், அந்த மாணவன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, நேற்று திங்கட்கிழமை இரவு வரையில் பல்கலைக்கழகப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார், தற்போது அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவு தொடர்பாக எழுந்த சர்ச்சையால் மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்திருந்ததுடன், பின்னர் நிர்வாக உயர்பீடத்தில் சில உத்தரவாதங்களையடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை தெரிந்ததே.

ஒழுக்காற்று நடவடிக்கைக்காக இடைநிறுத்தப்பட்ட, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரை மீண்டும் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதுதொடர்பான நிர்வாகத்தின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும், அதனிடையே முகாமைத்துவ பீட மாணவர்களிடையே எழுந்த புதிய சர்ச்சையால் அது குறித்து இன்னமும் நிர்வாகத்துடன் பேசவில்லை என்று மாணவர் ஒன்றியப் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக