கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

ஞாயிறு, 15 மே, 2011

காதலன் பாணியிலேயே கொடூரமாக தாக்கிய காதலி

ஒரு தலைப்பட்சமாகக் காதலித்த தனது காதலியின் முகத்தில் அசிட் ஊற்றி அவரின் தோற்றத்தை விகாரமாக்கி ஒரு கண்ணையும் குருடாக்கியுள்ளான்.
இதற்கு பழிவாங்கும் விதமாக அவனது முகத்திலும் அசிட் ஊற்ற நீதிமன்றம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உரிமை வழங்கியுள்ளது.
ஈரானிய நீதிமன்றமே இந்தப் பழிக்குப் பழிவாங்கும் உரிமையை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 32 வயதான ஆமினா பஹ்ரமி என்ற பெண்ணே பாதிக்கப்பட்டவராவார்.
இவரும் இவரின் முகத்தில் அஸிட் ஊற்றிய அவரின் காதலரும் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பயிலுபவர்கள். பழங்கால தீர்ப்பு முறைகள் ஈரானில் இன்னமும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றே பழிக்குப் பழி வாங்கும் உரிமையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்குதல். அந்த முறையின் கீழேயே இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. 27 வயதான மாஜித் மொஹவதி என்பவரே சல்பூரிக் அமிலத்தை இந்தப் பெண் மீது வீசியவர்.
அதனால் அழகிய தோற்றமுடைய அவரின் முகம் விகாரமாகிப் போனது. தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு இந்தப் பெண்ணைப் பல தடவைகள் கெஞ்சியும் அவர் அதற்கு சம்மதிக்காததால் ஆத்திரமடைந்தே மாஜித் இந்தக் கொடூரத்தைப் புரிந்துள்ளார்.
ஆமினாவுக்கு 19 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் அவருக்கு கண் பார்வையோ அல்லது பழைய தோற்றமோ கிடைக்கவில்லை. 2004ல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் ஆமினாவுக்கு 19000 பவுண்களை நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு மாஜித்துக்கு சிறைத் தண்டனையும் வழங்கியது.
ஆனால் இந்த நஷ்ட ஈட்டை ஆமினா ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் தான் அனுபவித்து வரும் வேதனையை மாஜித்தும் அனுபவிக்க வேண்டும் என்று கூறி தனக்கு பழிவாங்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டு மேன்முறையீடு செய்தார்.
பழிவாங்கத் துடிக்கும் ஆமினாவிடம் மாஜித்தின் தாயார் மன்றாடியுள்ளார். அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஆமினா தனது பிடிவாதத்தைக் கைவிடவில்லைஇப்போது மேன்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் ஆமினாவுக்கு சார்பாகத் தீர்ப்பளித்துள்ளது. மாஜித் தற்போது நோய்வாய்ப்பட்டு டெஹ்ரான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருந்தாலும் நீதிமன்ற உத்தரவின் படி நேற்று நண்பகல் அவரது இரு கண்களிலும் தலா 20 துளிகள் வீதம் அசிட்டைச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்திலேனும் ஆமினா மனம் மாறினால் இந்தத் தண்டனை ரத்தாகலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆறு வருடங்களின் பின் தனக்கு இப்போதாவது நீதி கிடைத்துள்ளமை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஆமினா நேற்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் நாம் இருவருமே தோற்றுப் போனவர்கள் காரணம் இருவருமே அதிக துன்பங்களைச் சந்தித்து விட்டோம் என்றும் ஆமினா தெரிவித்துள்ளார்.
கடைசியாக இன்று வெளியாகியுள்ள தகவல்களின் படி சர்வதேச அழுத்தங்களினால் காதலனின் முகத்தில் அசிட் ஊற்றுவது பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக