கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

சனி, 14 மே, 2011

ஈழம்.. கொடூரமும் கொலையும்! அம்பலமாக்கும் ஐ.நா.அறிக்கை - திடீர் தொடர் 5


ஈழப் போரின் ஆரம்பத்தில் இருந்தே... 'புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு​விட்டு சரணடைய வேண்டும்’ என்பதை சிங்கள இராணுவம் வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்று, கடைசிக் கட்டப்போரின்போது, சரணடைய முன்வந்த முன்னணித் தலைவர்​களைக் கொடூரமாகத் திட்டமிட்டுக் கொன்ற இராணுவம், அதற்குப் பின்னரும் பல்வேறு அத்துமீறல்களை அரங்கேற்றியது.
இந்தக் கொடு​மைகள் தொடர்பாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
புலிகள் பலவீனம் அடைந்ததும், சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அப்பாவி மக்கள் அதிக அச்சத்துடனேயே சென்றனர். அதை நிரூபிக்கும் வகையில், அவர்களை இராணுவம் சந்தேகத்தோடு பார்த்து கொலைகள் செய்தது. நிறையப் பெண்கள் புதிய விதவைகளாக மாறிவிட்டனர். அழவும் முடியாமல், அலறவும் முடியாமல் அவர்கள் நிலை குத்திய கண்களோடு வானத்தைப் பார்த்தனர்.
தஞ்சமடைய வெவ்வேறு இடங்களுக்கு ஓடியதால், பல குடும்பங்கள் திசைக்கு திசை சிதறிவிட்டன. குழந்தைகள் தனியாக... தாய் தனியாக... தந்தை தனியாக... வெவ்வேறு முகாம்களில் அவலத்துடன் தங்கினர்.
உதவிய கருணா...
உதறலில் மக்கள்!
நம்பி வந்த மக்களை வட்டுவாகல் பாலம் அருகே நிறுத்திய சிங்கள இராணுவம், 'அவர்களில் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இருக்கக்கூடும்’ என அஞ்சியது.
வெடிகுண்டுகள் இருக்குமோ... துப்பாக்கிகள் இருக்குமோ’ என்ற பயத்தால், மக்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து சோதனை செய்தனர். உயிருக்குப் பயந்து ஓடி வந்தவர்களிடம் இருந்த விலை உயர்ந்த பொருட்களையும் பறிமுதல் செய்தது இராணுவம். இதனால், கேமரா, லேப்-டாப் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்ட போர்க் காட்சிகள், கொடூரச் செயல்கள் போன்ற ஆவணங்கள் எல்லாம் சுவடற்றுப்போய் விட்டன!


பின்னர், அவர்களை அங்கிருந்து கால்நடையாகவே கிளிநொச்சி, புல்மோட்டை, பதவியா பகுதிகளுக்கு இழுத்து வந்தனர். வழி எல்லாம் முளைத்து இருந்தன பல சோதனைச் சாவடிகள். அவற்றில் நடந்ததோ... ஈரமற்ற சோதனைகள்!  புலிகளின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களைத் துளைத்து எடுத்தனர். கேவலமான இந்த சோதனைகளில் பெண்களும், குழந்தைகளும்கூட தப்பவில்லை.
அத்துடன் சிங்கள இராணுவத்துக்குத் துணையாக வந்திருந்தது, புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாவின் அமைப்பு. புலிகள் அமைப்பினரை மட்டும் அல்லாமல், அவர்களின் ஆதரவாளர்களையும் அந்த அமைப்பு காட்டிக் கொடுத்தது.
புலிகள் அமைப்பில் கட்டாயமாக சேர்க்கப்​பட்டவர்கள், குறுகிய காலம் மட்டுமே இருந்தவர்கள், ஒரு சில உதவிகளை மட்டும் செய்தவர்களைக்கூட கருணா அமைப்பு காட்டிக்கொடுத்தது. அப்படிப் பிடிபட்டவர்கள் விசாரணைக்காக தனியாக அழைத்துச் செல்லப்பட்டு... பலர் கொல்லப்பட்டனர். கூடுதல் விசாரணை என்ற பெயரில் போனவர்களும், திரும்பி வரவே இல்லை.
இந்த சோதனைகளுக்குப் பிறகு, துயரப்பட்டு நகர்ந்த மக்கள் கூட்டத்தை ஓமந்தை என்ற இடத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அடுத்த கட்ட நரகப் பரிசோதனை... வந்தவர்களின் ஆடைகளை எல்லாம் இராணுவம் அவிழ்க்கச் சொல்லியது.
பெண்கள், சிறுமிகளின் உடைகளையும் கட்டாயப்படுத்தி அவிழ்த்து சோதனை இட்டனர். தலை குனிந்து கூனிக் குறுகிய அந்த ஈழப் பெண்களைப் பார்த்து கொக்கரித்தனர் சிங்கள வீரர்கள். கூடவே அவர்களின் பரிகாசமும், அட்டகாசச் சிரிப்பும் அந்த இடத்தையே நிறைக்க... கதறித் துடித்தனர் ஆதரவற்ற பெண்கள்!
மருத்துவமனைகள் சிங்கள இராணுவத்தின் கட்டுப்​பாட்டுக்கு வந்ததும், சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு ஏகப்பட்ட இன்னல்கள். இராணுவ வீரர்களும், சி.ஐ.டி. பிரிவும் மாறி மாறி அடுத்தடுத்து கேள்விகளைத் தொடுக்க, அப்பாவி மக்கள் நொந்து போய்விட்டனர்.
பயங்கரவாதப் புலனாய்வு அமைப்பினர் (டி.ஐ.டி) தனியாக விசாரணை நடத்தினர். இந்த வேதனையை சகிக்க முடியாத நோயாளிகள் பலர், 'சிகிச்சை இல்லாமல் உயிர் போனாலும் பரவாயில்லை’ என்ற முடிவெடுத்து மருத்துவமனையைவிட்டு வெளியேறினர்.
மரண தண்டனை!
இராணுவத்தால் பிடிக்கப்பட்ட புலிகள் பலர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதற்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்கள் இருக்கின்றன.
பிரிட்டனின் சேனல்-4, சில வீடியோ காட்சிகளை வெளி​யிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் அப்பாவிகள் தரையில் உட்காரவைக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் கட்டப்பட்டு உள்ளன. ஒட்டுத் துணியும் அவர்களிடம் இல்லை. அவர்களின் முகத்தை தரையை நோக்கி குனியும்படி சிங்கள இராணுவத்தினரிடம் இருந்து கட்டளை வருகிறது. அதைத் தொடர்ந்து, பின்னால் இருந்தபடி சிங்கள வீரர்கள் சரமாரியாக சுடுகிறார்கள். துடிதுடிக்கும் உடல்கள் ஓய்ந்து அடங்குகின்றன. அதே இடத்தில், ஏற்கெனவே கொல்லப்பட்டுக்கிடக்கும் நிறைய உடல்களும் காட்சிகளில் தெரிகின்றன.
அதே சேனலில் மீண்டும் ஒரு வீடியோ ஒளிபரப்பானது. அதில், தலையில் சுடப்பட்டு சிதறிக் கிடக்கும் ஆண்கள், பெண்களின் நிர்வாண உடல்கள் சிதறிக்கிடந்தன. அதில் ஒரு சிறுவனும், இளம் பெண்ணும் அலங்கோலமாகக் கிடக்க... அந்தப் பெண், புலிகளின் மீடியா அமைப்பில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இசைப்பிரியா!
கொல்லப்பட்ட அனைவரும் கடுமையான சித்ரவதைக்கு உட்பட்டு இருக்கிறார்கள் என்பதை அந்த உடல்களே சாட்சியம் அளிக்கின்றன.
இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் நம்பகத்தன்மை பற்றி முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, அவை உண்மை​யானவை என்பது தெளிவானது.
அத்துமீறல்கள் இத்துடன் நின்றுவிடவில்லை. சிங்கள இராணுவ வீரர்களின் பிடியில் சிக்கிச் சீரழிந்த அபலைப் பெண்களின் நிலைமையோ துன்பக் கேணிதான்!
- துயரங்கள் தொடரும்...

0 comments:

கருத்துரையிடுக