கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

சனி, 7 மே, 2011

புலம் பெயர் தமிழர்களைக் குறிவைத்து 'Operation Trust' இராணுவ நடவடிக்கை?– நிராஜ் டேவிட்


அது என்ன 'ஒப்பரேஷன் ட்ரஸ்ட்"?  ஒப்பரேஷன் ட்ரஸ்ட்" என்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உலக இராணுவ விவகாரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு போதாது என்றுதான் கூறவேண்டும்.
ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிக முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான ஒரு நடவடிக்கைதான் இந்த Operation Trust  என்ற இராணுவ நடவடிக்கை.
ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராகப் புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் Operation Trust.
இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது உலக மட்டத்தில் ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு உளவு அமைப்பாக வலம் வந்த கே.ஜீ.பி (KGB) அமைப்பு.
சோவியத் ஒன்றியத்தின் ஆணிவேர், சோவியத் ஒன்றியத்தின் கண்கள், சோவியத்தின் மூளை என்கின்றதான பல அடையாளங்களுடன் மிகவும் வெற்றிகரமாக வலம்வந்த உளவு அமைப்பு - கே.ஜீ.பி. உளவு அமைப்பு.
புலம்பெயர்ந்த ஒரு தொகுதி ரஷ்ய பிரஜைகளால் சோவியத்தின் கமியூனிச ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ள ஒரு மிகப் பெரிய புரட்சியை முற்காகவே கிள்ளி எறிவதற்காக கே.ஜீ.பி. உளவு அமைப்பு மேற்கொண்ட ஒரு இரகசிய உளவு நடவடிக்கைதான் Operation Trust.
.
(அந்த நேரத்தில் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பு OGPU என்ற பெயரில்தான் செயற்பட்டுவந்தது. பின்நாட்களில்தான் கே.ஜீ.பி. என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் பின்னாட்களில் பிரபல்யமான கே.ஜீ.பி. என்ற பெயரையே பரிட்சயம் காரணமாக இந்தக் கட்டுரையில் பாவிக்கின்றேன்)
ரஷ்யப் புரட்சி முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ரஷ்யாவில் மன்னராட்சியை உருவாக்கும் நோக்கோடு ஒரு புரட்சிகர அமைப்பு உருவானது. அதன் பெயர் Monarchist Union of Central Russia (MUCR). 1921ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கம், ரஷ்யாவில் எப்படியும் மீண்டும் மன்னராட்சியை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு போராடி வந்தது. சோவியத் ஒன்றியம் முழுவதிலும் அப்போதைய போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த பல்வேறு இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு மிகவும் மும்முரமான போராட்டத்தை மேற்கொண்டுவந்தது இந்த MUCR அமைப்பு.
இந்த நேரத்தில்தான் கே.ஜீ.பி. ஒரு இரகசிய ஒப்பரேஷனை மேற்கொண்டது.
மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, நிதானமாக, மிகவும் இரகசியமாக காய்களை நகர்த்தியது.
கே.ஜீ.பி. இனது நோக்கமும், திட்டமும் வெறும் MUCR இயக்கத்தை முடக்குவது மாத்திரமல்ல. அதனையும் தாண்டி நீண்ட, விரிந்த திட்டத்தைத் தீட்டியது கே.ஜீ.பி.
சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போர்க்கொடி துக்கியிருந்த அனைத்து இயக்கங்களையும் கூண்டோடு அழித்துவிடத் திட்டம் தீட்டியது. அது மாத்திரமல்ல. சோவியத்தில் இருந்து வெளியேறி மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கிருந்தபடி போராடிவரும் அமைப்புகளுக்கும் சேர்த்து வலை விரித்தது கே.ஜீ.பி..
நுணுக்கமானதும், மிகவும் கஷ்டமானதுமான ஒரு உளவுச் சதி. ஆனாலும் அதனை வெற்றிகரமாக மேற்கொண்டு பிபல்யமான ஒரு உலகசாதனை படைத்தது கே.ஜீ.பி.
இந்த இரகசிய உளவு நடவடிக்கைக்கு கே.ஜீ.பி. சூட்டிய பெயர் Operation Trust.
முதலில் அந்த புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சுதந்தியரமாகச் செயற்படவிட்டார்கள். அழைத்துப் பேசினார்கள். பகிரங்கமாக ஆர்ப்பாட்டம் செய்ய, கூட்டம் கூட, கருத்துக்கூறவெல்லாம் அனுமதித்தார்கள். தீடீரென்று ஒருநாள் ஒட்டுமொத்தமாக அனைத்து செயற்பாட்டாளர்களையும், தலைமையையும் கைதுசெய்தார்கள்.
ஆனால் இந்த கைது விவகாரம் வெளியே யாருக்குமே தெரியாது.
காதும் காதும் வைத்தாற்போன்று அனைவரையும் பிடித்து உள்ளேபோட்டுவிட்டு, கே.ஜீ.பி.ஏஜன்டுக்கள் MUCR இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போன்று செயற்பட ஆரம்பித்தார்கள். கைதுசெய்யப்பட்ட MUCR இயக்கத் தலைமைகளையும் மிட்டி, சித்திரவதை செய்து பணிய வைத்து தங்களது கைப்பாவைகளாக செயற்பட வைத்தார்கள். (மனைவி, பிள்ளைகளை இரகசியச் சிறைகளில் பணயம் வைத்துக்கொண்டு, தாம் சொல்கின்றபடி நடந்தாகவேண்டும் என்று மிரட்டினால் பாவம் அந்த இயக்க உறுப்பினர்களால் வேறு என்னதான் செய்யமுடியும்?)
MUCR இயக்கத்தினரைப் போன்று வேடமணிந்து செயற்பட்ட ஆரம்பித்த கே.ஜீ.பி. உறுப்பினர்கள், முன்னர் இருந்த MUCR இயக்கத்தைவிட இன்னும் வேகமாக புரட்சி பேசினார்கள். செயற்பட்டார்கள். வெற்றிகரமாகச் சில தாக்குதல்களைக்கூட மேற்கொண்டார்கள். அத்தோடு, சோவியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபடி ரஷ்யாவிலும், வேறு பல நாடுகளிலும் செயற்பட்டு வந்த மற்றைய அமைப்புக்களுக்கு நிதி உதவிகளும், வேறு பல உதவிகளும் செய்யத் தலைப்பட்டார்கள்.
இது, MUCR இயக்கம் என்ற பெயரில் செயற்பட்ட கே.ஜீ.பி. உளவு அமைப்பிற்கு சோவியத் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்ட அனைத்து தரப்பினர் பற்றிய முழு விபரங்களையும் திரட்டுவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது.
விபரங்களைத் திரட்டினார்கள். முக்கியமானவர்களைக் கைதுசெய்தார்கள். கைதுசெய்ய முடியாதவர்களை படுகொலை செய்தார்கள். பல்வேறு இயக்கங்கள் மத்தியிலும், இயக்கங்களுக்கு உள்ளேயும் கூட பிழவுகளை ஏற்படுத்தினார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் சோவியத் ஒன்றியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த அனைத்து இயக்கங்களையும் முடக்கிவிடுவதில் கே.ஜீ.பி. உளவு அமைப்பு வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் இந்த ஒப்பரேஷனைப் பொறுத்தவரையில் கே.ஜீ.பி. உளவு அமைப்பிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பது, அவர்கள் சோவியத்தில் மாத்திரமல்லாமல் மேற்குலக நாடுகளில் செயற்பட்டு வந்த பல்வேறு இயக்கங்களையும், செயற்பாட்டாளர்களையும் ஒடுக்குவதின் ஊடாகத்தான் கிடைத்தது.
ஆம், சோவியத் ஒன்றியத்தில் மாத்திரமல்ல ரஷ்யர்கள் புலம்பெயர்ந்து செயற்பட்ட மேற்குல நாடுகளிலும் கூட, கே.ஜீ.பியின் இந்த Operation Trust  என்ற இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது.
ரஷ்யாவில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்து தஞ்சம் அடைந்த சில கே.ஜீ.பி. ஏஜன்டுக்கள், தம்மை ஆருஊசு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெளிக்காண்பித்து நடித்துக்கொண்டு சோவியத் அரசிற்கு எதிராக புரட்சி பேசினார்கள். தம்மை தீவிரவாதிகளாக வெளிக்காண்பித்துக்கொண்டு சோவியத் ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வதாகப் ‘பவ்லா’ காண்பித்தார்கள். புலம்பெயர் நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்டுக்கொண்டிருந்த பல்வேறு சக்திகளையும் ஒன்றுதிரட்டி சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியைத் தாம் வீழ்த்தப் போவதாக அறைகூவல் விடுத்தார்கள்.
சோவியத்தில் இருந்து புலம்பெயர்ந்து பலநாடுகளிலும் சோவியத் ஆட்சிக்கு எதிராகக் கொதித்துக்கொண்டிருந்த பல இளைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பெரும் பணக்காரர்கள், ஊடகவியலாளர்கள் இந்த MUCR இயக்கத்தின் வெளிநாட்டுப் பிரிவுடன் சேர்ந்து செயற்பட முன்வந்தார்கள். பலவிதமான உதவிகள் ஒத்தாசைகளை வழங்கினார்கள். பணத்தை அள்ளி இறைத்தார்கள். ஆருஊசு என்ற அந்தப் புரட்சிகர அமைப்பைப் பயன்படுத்தி எப்படி சோவியத் ஆட்வியைக் கலைக்கலாம் என்று திட்டம் தீட்டினார்கள்.
ஆனால் MUCR இயக்கம் என்ற பெயரில் செயற்பட்ட சோவியத்தின் உளவுப் பிரிவினரோ மிகவும் கவனமாகச் செயற்பட்டு ஒரு பெரிய உளவுச் சதியை அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.
அந்த உளவுச் சதி, உலகின் போரியல் வரலாற்றில் மிகவும் உறுதியாகப் பதியப்படும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய வெற்றியை சோவியத்தின் உளவுப் பிரிவான கே.ஜீ.பிக்குப் பெற்றுக்கொடுத்தது.
இப்பொழுது ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பார்ப்போம்.
எங்கள் அனைவருக்கும் ஜேம்ஸ் பொண்ட் 007 என்ற சினிமா காதாபாத்திரத்தை நன்றாகத் தெரியும். இந்த ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரம் ஒரு பிரித்தானிய இரகசிய உளவாளி. மிகப் பெரிய வீர சாகசங்களை தனி ஒருவனாகச் செய்வதில் வல்லவனாக இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. ஜேம்ஸ் பொண்ட் 007 என்ற வீர கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளரின் பெயர் இயான் பிளேமிங் (Ian Fleming). தனது இந்த ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரம் பற்றி இவர் பின்நாட்களில் கருத்துத் தெரிவிக்கும் பொழுது, 'சிட்னி ரெய்லி (Sidnely Reily) என்ற ஒரு பிரித்தானிய உளவாளியின் உண்மையான வீர சாகசம்தான் என்னை ஜேம்ஸ் பொண்ட் 007 கதாபாத்திரத்தை உருவாக்க வைத்தது. இந்த பிரித்தான உளவாளியையும், அவனது சாகசங்களையும் அடிப்படையாக வைத்துத்தான் நான் ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்" என்று தெரிவித்திருந்தார்.
அந்த அளவிற்கு பிரபல்யமான இந்த சிட்னி ரெய்லி என்ற பிரித்தானிய உளவாளி உண்மையிலேயே ஒரு ரஷ்யர். ரஷ்யாவில் பிறந்த இவர் ஏதோ காணத்திற்காக ரஷ்ய ஆட்சியை வெறுக்கத் தொடங்கினார். சிறு வயதிலேயே தனது குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். பிரித்தானியாவின் இரகசியப் பொலிஸ் பிரிவில் இணைந்து இவர் செய்த சாகசங்கள் கொஞ்சநஞ்சமல்ல. உளவாளியாக ரஷ்யாவிற்குச் சென்று அங்கிருந்து பலவிதமாக இரகசியங்களைத் திருடி பிரித்தானியாவிற்கு கொண்டு வந்து பல சாதனைகளைப் புரிந்தார்.
அந்தக் காலகட்டத்தில் ரஷ்யா என்பது உலகைப் பொறுத்தவரையில் ஒரு இரும்புத் திரையின் பின்னால் இருந்த ஒரு தேசம். அங்கு என்ன நடக்கின்றது என்று உலகில் யாருக்குமே தெரியாது. அப்படிப்பட்ட ரஷ்யாவிற்குள் பல்வேறு வேஷங்களில் நுழைந்து, அங்கிருந்து இரகசியங்களைத் திருடுவதும், அந்த இரகசியங்களை பிரித்தானியாவுக்குக் கடத்தி வருவதும் இலகுவான ஒரு காரியமல்ல. ஆனால் அதனைச் சாதித்துக் காட்டினார் சிட்னி ரெய்லி.
அது மாத்திரமல்ல அப்பொழுது இருந்த லெனினின் ஆட்சியைக் கலைத்துவிட்டு சிட்னி ரெய்லியை அதிபராக்கும் இரகசியச் சதித்திட்டமும் பிரித்தானியாவிடம் இருந்தது. அந்த நோக்கத்திலும் பல காய்கள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்தன ரஷ்யாவில்.
சோவியத்தின் இராணுவத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தில்; சிட்னி ரெய்லி என்ற இந்த மோசமான உளவாளி பற்றி தெரியவந்த பொழுது, ரஷ்யாவில் தங்கியிருந்த அவர் மிகவும் சாதூர்யமாகத் தப்பி பிரித்தானியா வந்து சேர்ந்தார். மிகவும் பாதுகாப்பாக அங்கு அமர்ந்தும் கொண்டார். அதன் பின்னர் பிரித்தானியாவில் இருந்தபடியே ரஷ்யாவின் ஆட்சியைக் கவிழ்க்கும் சதிவேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்.
இந்த சிட்னி ரெய்லியை கைதுசெய்ததுதான் Operation Trust  என்ற இராணுவ நடவடிக்கையின் மிகப் பெரிய வெற்றி என்று வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.
எப்படிக் கைதுசெய்தார்கள்?
கைது செய்யவில்லை, ஒரு வகையில் சதி செய்து கடத்திச் சென்றார்கள் என்று கூறலாம்.
லெனினின் ஆட்சியை எப்படிக் கவிழ்ப்பது என்று சதா சிந்தித்துக்கொண்டிருந்த சிட்னி ரெய்லிக்கு, ஆருஊசு என்ற புரட்சிகர அமைப்பின் ஐரோப்பிய வருகை பற்றிய செய்தி இனிப்பாகக் கிடைத்தது. அந்த அமைப்பைத் தொடர்புகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மிகவும் சந்தோஷம் என்று அவரை கைகுலுக்கி வரவேற்றது ஆருஊசு இனது ஐரோப்பியப் பிரிவு.
MUCR என்ற பெயரில் ரஷ்யாவின் கே.ஜீ.பி. உறுப்பினர்கள்தான் அங்கு வந்திருக்கின்றார்கள் என்று சிட்னி ரெய்லிக்குத் தெரியாது. தானாகவே சென்று வலையில் வீழ்ந்தார். லெனினின் ஆட்சியை எப்படி வீழ்த்தலாம் என்று அவர்களுடன் சேர்ந்து நுணுக்கமாகத் திட்டம் தீட்டினார்.
ஆனால், இங்கே லண்டனில் அமர்ந்துகொண்டு லெனினை வீழ்த்துவது எப்படி? ரஷ்யாவில் ஆட்சிதான் அமைப்பது எப்படி? அதற்கு ரஷ்யாவிற்கு நேரில் போகவேண்டும் அல்லவா?
'ரஷ்யாவில் மிகவும் பலமாகச் செயற்படும் எங்களது உறுப்பினர்களூடாக உங்கள் இரகசியப் பயணத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்து தருகின்றோம்" என்றது MUCR இனது ஐரோப்பியப் பிரிவு. 'நீங்களே நேரடியாகச் சென்று ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் பற்றி விளக்கிச்சொன்னால் அங்குள்ள எங்கள் உறுப்பினர்களுக்குத் தெம்பாக இருக்கும்.. மேலும் உற்சாகமாகச் செயற்படுவார்கள்.." சிட்னி ரெய்லிக்கு ஐடியா கொடுத்தார்கள் MUCR இனது ஐரோப்பியப் பிரிவு.
ரஷ்யாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு என்று மிகவும் இரகசியமாகப் புறப்பட்ட சிட்னி ரெய்லி, ரஷ்யாவில் பகிரங்கமாகக் கைது செய்யப்பட்டார். அவரை ரஷ்யாவிற்கு இரகசியமாக அழைத்துச் சென்ற கே.ஜீ.பி. உறுப்பினர்களே, ரஷ்ய எல்லையை அடைந்ததும் அவரைக் கைதுசெய்தார்கள். சித்திரவதைகள், விசாரணை, துப்பாக்கிச் சூடு என்று மிகவும் சோகமாக முடிவடைந்தது பிரபல்யமான, திறமையான ஒரு வீரனின் வாழ்க்கை.
அது மாத்திரமல்ல, இவர் போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் ரஷ்ய ஆட்சிக்கு எதிராகச் செயட்பட்டுக் கொண்டிருந்த பல புரட்சியாளர்கள், தேசப்பற்றாளர்கள், தேசியவாதிகள் ஏமாற்றப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். காணாமல் போணார்கள், கடத்தப்பட்டார்கள். செயலிழக்க வைக்கப்பட்டார்கள்.
இதுதான் Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை.
உலக அளவில் மிகவும் வெற்கரமான ஒரு உளவு நடவடிக்கை.
உலக நாடுகளின் புலனாய்வுப் பிரிவினருக்கான ஒரு முக்கிய பாலர் பாடம்தான் Operation Trust  என்ற இந்த இராணுவ நடவடிக்கை. இப்பொழுது உள்ள மிகப் பெரிய கேள்வி இதுதான்.
Operation Trust  போன்ற ஒரு உளவு நடவடிக்கையை புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து சிறிலங்கா இராணுவம் மேற்கொள்ளுகின்றதா?
கொஞ்சம் சிக்கலான கேள்விதான். ஆனாலும் புலம்பெயர் தமிழர்கள் பெரிதாக யோசித்தேயாக வேண்டிய கேள்வி.
ஆம் மேற்கொள்ளப்படுகின்றது என்று உறுதியாகக் கூறுவதற்கு என்னிடம் போதியளவு ஆதாரம் கிடையாது.
ஆனால் அப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான சந்தர்ப்பங்களும், சாத்தியங்களும் நிறையவே இருக்கின்றன என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
அந்தச் சாத்தியங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள், தளபதிகள், போராளிகள் என்று ஏராளமானவர்கள் கொத்தாக சிறிலங்கா இராணுவத்தின் கரங்களில் கிடைத்தார்கள். அவர்களை முழுக்க முழுக்க சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர்தான் கையாண்டு வருகின்றார்கள். அப்படித் தமது கரங்களில் கிடைத்தவர்களை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பயன்படுத்தி வருகின்ற சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு, அவர்களை நிச்சயம் தமது புலனாய்வுத் தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் வைத்திருக்கமாட்டார்கள்.
இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து செயற்பாடுகளும்; இலங்கையில் ஓரளவு முழுமையாகவே அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், விடுதலைப் புலிகள்வசம் இருந்த ஆயுதங்கள், அவற்றை இயக்கக்கூடியவர்கள் என்று அனைத்துமே சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுவிட்ட நிலையில், புலம்பெயர் சமூகத்தின் செயற்பாடுகள்தாம் சிறிலங்கா தேசத்தை கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்தும்படியாக இருந்து வருகின்றன. எனவே சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு தனது அத்தனை பலத்தையும் நிச்சயமாகப் புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்துத்தான் திருப்பி விட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சரி, புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவு என்ன செய்யலாம்?
செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்கள், சமூகத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களை விலைபேசலாம். மிரட்டலாம்.
ஆனால் விலைபோகக்கூடியவர்கள் அனைவரும் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னரே விலைபோய்விட்டார்கள். சிங்களத்தின் மிரட்டல்களுக்கு கலங்கக்கூடிவர்கள் மீதும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவும் அதன் கூலிகளும் கைவைத்து நீண்டநாட்களாகிவிட்டன. இவை எதற்கும் அகப்படாமல் எஞ்சியிருப்பவர்கள்தான் சிங்களத்திற்கு தற்பொழுது பிரச்சனை. எதற்கும் அஞ்சாமல், எதற்கும் விலைபோகாமல் புலம்பெயர் தேசங்களில் ஓர்மமாக நின்றுகொண்டிருப்பவர்கள் பற்றித்தான் சிறிலங்கா கொஞ்சம் சிந்திக்கின்றது. கவனமெடுக்கின்றது.
எதற்கும் அடிப்பணியாமல் வீரமாக புலம்பெயர் தேசங்களில் நின்று போராடும் அப்படிப்பட்ட மறத் தமிழர்களை என்னசெய்யலாம்?
இது பற்றிப் பார்ப்பதானால், சுமார் ஒன்றரை வருடங்கள் நாம் பின்நோக்கிச் செல்லவேண்டும்.
முள்ளிவாய்க்கால் முடிவினைத் தொடர்ந்து அப்பொழுது ஒரு பெரிய வெற்றிடம் காணப்பட்டது. புலிகளை தாம் முற்றாகவே அழித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. தளபதிகள், போராளிகள், ஆதரவாளர்கள், மக்கள் என்று அனைவரையுமே சிறைக்குள் தள்ளிவிட்டு, தனது வெற்றியை பல நாட்கள் கொண்டாடியது சிங்களத் தலைமை.
ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் தமது வெற்றிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய சில ஆபத்துக்கள் இலங்கையில் பரவலாக மறைந்து இருந்ததை சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவு உணர்ந்தது. அதாவது, வடக்கு கிழக்கு, மற்றும் தென் இலங்கைக் காடுகளில் ஆயுதங்களுடன் புலிகளின் சிறிய சிறிய அணிகள் நிலைகொண்டிருந்தன. அதேபோன்று கொழும்பிலும், தென் இலங்கையிலும், புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்துகொண்டிருந்தார்கள். உத்தரவு கிடைத்ததும் செயற்படுவதற்கென்று ஏராளமான தற்கொலைப் போராளிகளும் பல இடங்களிலும் மறைந்திருந்தார்கள்.
புலிகள் மீதான வெற்றி என்று கொண்டாடிக்கொண்டிருந்த சிங்களத்திற்கு, இந்த விடயம் ஒரு பெரிய அச்சுறுத்தலாகவே இருந்தது.
வடக்கு கிழக்கில் உள்ள காடுகளிலும், தென் இலங்கை மற்றும் தலைநகர் கொழும்பிலும் பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருக்கும் நூற்றிற்கும் அதிகமான விடுதலைப் புலி உறுப்பினர்களை கண்டுபிடிக்கவேண்டும். அழிக்கவேண்டும்.
இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவு, ஒரு இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த நடவடிக்கை கிட்டத்தட்ட Operation Trust  உளவு நடவடிக்கையை ஒத்ததாகவே இருந்தது.
தம்மிடம் சரணடைந்த அல்லது தம்மால் கைதுசெய்யப்பட்ட சில விடுதலைப் புலி முக்கியஸ்தர்களை சித்திரவதை செய்து, அவர்களது மனைவி குழந்தைகளைப் பணயம் வைத்து, மிகவும் கவனமாக ஒரு இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டது சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு.
அதாவது, முள்ளிவாய்கால் நடவடிக்கையின் பொழுது சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்படாமல் சில தளபதிகள், ஒரு தொகுதி விடுதலைப் புலி உறுப்பினர்கள் தப்பித்து வன்னிக் காடுகளில் உள்ள நிலக்கீழ் சுரங்கங்களில் மறைந்திருந்து செயற்படுவது போன்ற ஒரு தோற்றப்பாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் ஏற்பாடு செய்த குழு, பல்வேறு இடங்களில் மறைந்திருந்த போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தாம் மீள ஒருங்கிணைந்து போராடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள். தம்மை அழித்த சிறிலங்காப் படையினரைப் பழிவாங்கவேண்டும் என்று சபதம் எடுத்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் புலம்பெயர் நாடுகளில் தேசியம் பேசிக்கொண்டிருந்த ஒரு தரப்பினரால் அவிழ்த்துவிடப்பட்ட கதைகளும், மாயைகளும் கூட, சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரின் இந்த இரகசிய நடவடிக்கைக்குப் பெரிதும் உதவவே செய்தன. 'அதோ அவர் அங்கே இருக்கின்றார்…. இதோ ஐயாயிரம் பேருடன் அந்த தளபதி வன்னியில் மறைந்திருக்கிறார்"….. ~புலிகள் வன்னியில் இன்று தாக்குதல்… பல இராணுவத்தினர் காயம்… ஆனால் செய்தியை சிறிலங்கா அரசாங்கம் மறைத்துவிட்டது…| ..'வன்னியில் பல சிறிலங்கா படையினரைக் காணவில்லை.."- இதுபோன்று புலம்பெயர் தமிழர்களில் ஒரு பிரிவினர் ஆர்வக்கோளாரினால் மேற்கொண்ட பிரச்சாரங்கள், சிறிலங்கா படையினர் மேற்கொண்ட அந்த இரகசிய நடவடிக்கைக்குப் பெரிய அளவில் கைகொடுத்தது.
மீள ஒருங்கிணைய முயன்றவர்கள் சிறிலங்காப் படையினரிடம் வசமாகவே மாட்டிக்கொண்டார்கள். பல கரும்புலிகள்கூட இந்த இரகசியச் சதி நடவடிக்கையின் பொழுது அகப்பட்டுக்கொண்டார்கள். பல ஆண்டுகள் கொழும்பிலும் அதன் சுற்றுவட்டத்திலும் இரகசியமாகச் செயற்பட்டு வந்த புலிகளின் பல உளவாளிகள் சிறிலங்காப் படையினரிடம் மிக இலகுவாகவே அகப்பட்டுக்கொண்டார்கள்.
சிறிலங்கா புலனாய்வாரள்களால் இயக்கப்பட்ட இந்த அணியினர் புலம்பெயர் தேசங்களில் செயற்பட்ட முக்கிய செயற்பாட்டாளர்களையும் தொடர்புகொண்டு, பல்வேறு தகவல்களைப் பெற்றார்கள். பெருமளவு பணத்தை அனுப்பிவைக்கும்படி கேட்டு அதனைப் பெற்றார்கள். வெளிநாடுகளில் இருந்த செயற்பாட்டாளர்களுடன் இலங்கையில் தொடர்புகளில் இருந்த நபர்களையும் தமது இந்த நடவடிக்கையினூடாகக் கண்டுபிடித்தார்கள்.
இப்பொழுது மறுபடியும் பழைய கேள்விக்கு வருவோம்.
இதேவகையிலான நடவடிக்கையை புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவு செய்வதற்குச் சந்தர்ப்பம் உள்ளதா?
நிச்சயமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ் தேசியத்தின் மீது புலம்பெயர் தமிழர்கள் கொண்டுள்ள வெறி புலம்பெயர் தமிழர்களின் மிகப் பெரிய பலம் என்பது உண்மையே. அதேவேளை இந்த வெறி|தான் புலம்பெயர் தமிழர்களின் மிகப் பெரிய பலவீனம் என்பதையும் நாம் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும்.
'தமிழ் தேசியம்" என்று கூறிக்கொண்டு யாரும் எம்மை இலகுவாக ஏமாற்றிவிடும் அளவிற்கு இந்த வெறிக்கு நாம் அடிமையாகிக் கிடக்கின்றோம். பல வியாபாரிகள் தேசியம் பேசி எம்மை, எமது பொருளாதாரத்தை வளைத்துப் போடுவதை நாம் தெரிந்துகொண்டே அனுமதித்துக்கொண்டிருக்கின்றோம்- தேசியத்தின் பெயரால்.
எனவே எமது மிகப் பெரிய பலமாக நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கின்ற தேசியத்தின் மீதான எமது கண்மூடித்தனமான பற்று, மிதமிஞ்சிய வெறி -இவற்றினையே எமக்கு எதிரான தமது நகர்வுகளுக்கு எமது எதிரி பயன்படுத்த முனையும் சந்தர்ப்பம் இருக்கவே செய்கின்றது.
'இல்லை இல்லை.. அது ஒருபோதும் முடியாது.." என்று சிலர் கூறலாம்.
ஆனால் தாம் நேசிக்கின்ற தேசியத்தின் பெயரால் இன்று சில தேசியவாதிகள் தெருவில் நின்று சட்டையைக் கிழித்துக்கொண்டு அடிபடுவது எமது பலவீனத்திற்கு ஒரு சிறந்த உதாரணம்.
எம்மைவிட வேகமாக தமிழ் தேசியம் பேசிக்கொண்டு Operation Trust   உளவு நடவடிக்கை எம்மத்தியில் மேற்கொள்ளப்படக்கூடிதற்கான சாத்தியத்தை நாம் இலகுவாக உதறித்தள்ளிவிட முடியாது.
இந்தியாவில் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் என்ற கதை எம்மவர்கள் மத்தியில் தற்பொழுது மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. இந்தக் கதையின் தோற்றுவாய் எது என்று பார்த்தால் சிறிலங்காவின் பாராளுமன்றத்தில்தான் இந்தக் கதை முதன்முதலில் அவிழ்த்துவிடப்பட்டது. அதுவும் சிறிலங்காவின் பிரதமர்தான் இந்தக் கதையை பகிரங்கமாகத் தெரிவித்தார். அவர் சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள்காட்டித்தான் இந்தக் கதையைத் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பல விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள், திடீரென்று புலம்பெயர் நாடுகளில் தோன்றி தேசியம் பேசுவது இன்று சாதாரண நிகழ்வாக மாறி வருகின்றது. 'நான் வன்னியில் தலைவருடன் நின்றனான்.. "- என்று கூறிக்கொண்டு நிறையப் பேர் ஐரோப்பாவில் தற்பொழுது அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.
தலைவருடன் நின்ற நீங்கள் எப்படித் தப்பி வந்தீர்கள்? ஏன் தலைவரை விட்டுவிட்டு இங்கு வந்தீர்கள்? இதுபோன்ற கேள்விகளை நாங்களும் கேட்பதில்லை. அதற்கான பதிலை அவர்களும் சொல்வதில்லை.
இன்றும் குறிப்பாகப் பார்த்தால், இவர்களில் அனேகமானோர் சிறிலங்கா விமான நிலையம் வழியாகவே வந்திருக்கின்றார்கள். இவர்களில் பலர், வவுனியாவில் சிறிலங்கா தடுப்பு முகாமில் மாதக்கணக்காக சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள். வன்னியில் புலிகளுக்குச் சாப்பாடு கொடுத்தவர்கள், சென்றியில் நின்றவர்கள், எல்லைக் காவல் கடமைகளில் ஈடுபட்டவர்கள் என்று பலரும் இப்பொழுது கூட சிறிலங்கா படையினரைல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைவரும் அறிந்த விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள், தவைருடன் இருந்தவர்களால் எப்படி சிறிலங்கா இராணுவத்தின் வாய்களுக்குள் இருந்து வெளியேற முடிந்தது? எப்படி சிறிலங்கா படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்காவின் ஒரே சர்வதேச விமான நிலையம் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு வர முடிந்தது? இது பலராலும் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகின்றது. இவர்கள் Operation Trust  உளவு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டவர்களா என்கின்ற கோணத்திலும் சிந்திக்கவேண்டிய நிலையில்தான் இன்று புலம்பெயர் தமிழர்கள் இருக்கின்றார்கள்.
இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் கடந்த காலங்களில் தமிழ் தேசிய எதிரிகளாக வலம் வந்தவர்களின்; செயற்பாடுகளை சற்று ஆழமாக நோக்குகின்ற பொழுது இந்தச் சந்தேகம் மேலும் வலுவடைகின்றது. ஐரோப்பிய நாடுகளில் தமிழ் தேசியவாதிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சாதாரணமான ஒரு மே தின ஊர்வலத்திலேயே புகுந்து கலாட்டா பண்ணுகின்ற மாற்றுக் குழுவினர், அல்லது சிறிலங்காவின் கைக்கூலிகள், தற்பொழுது புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளுகின்ற போராட்டங்கள் தொடர்பில் பெரிய அளவில் அக்கறை காண்பிப்பதை காணமுடிவதில்லை.
மகிந்தவிற்கு எதிராக புலம்பெயர் மண்ணில் ஒரு பெரிய வேள்வியே நடைபெற்று வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூட, இப்படிப்பட்டவர்கள் ஒரு புன்சிரிப்புடன் மௌனம் கடைப்பிடித்து வருவதை ஒரு வித்தியாசமான – அதேவேளை அவதாணிக்கப்படவேண்டிய ஒரு நகர்வாகவே நான் பார்க்கின்றேன்.
இது, சிறிலங்கா இராணுவம் புலம்பெயர் மண்ணில் மேற்கொள்ளுகின்ற Operation Trust   போன்ற ஒரு ஒரு உறுதியான, நீண்டகால செயற்பாட்டுக்கான வழிவிடுதலாகக் கூட இருக்கலாம்.
புலம்பெயர் தமிழர்கள் சற்று ஆழமாகச் சிந்திக்கவேண்டிய தருணம் இது.
இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை தெளிவுபடுத்திவிட விரும்புகின்றேன்.
வன்னி மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மரணத்தின் பிடியில் இருந்து மயிரிழையில் தப்பித்து, உயிரைக் கையில் பிடித்தபடி மேற்குலகில் தஞ்சடைந்திருக்கும் பலர் இன்று எம்மத்தியில் இருக்கின்றார்கள். அவர்களின் உண்மையும், தூய்மையும் உண்மையிலேயே மெச்சத்தக்கது. அவர்களது வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் புலம்பெயர் தமிழர்களுக்கு நிச்சயம் தேவை என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனாலும் இவர்கள் மத்தியில் கலந்து சிறிலங்காப் புலனாய்வாரள்களால் அனுப்பப்படும் உளவு ஏஜன்டுக்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வையும் நாம் கொண்டிருப்பது இச்சந்தர்ப்பத்தில் மிக மிக அவசியம்.
இல்லாவிட்டால், புலம்பெயர் தமிழர்களின் விடுதலை உணர்வை திசைதிருப்பும் ஒருவகை Operation Trust உளவு நடவடிக்கைக்கு அனியாயமாகப் பலியாகிப்போன மற்றொரு இனம் என்கின்ற பெயர் வரலாற்றில் எமக்கு கிடைத்துவிடும்.

0 comments:

கருத்துரையிடுக