சச்சின், சானியா மீது தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு
தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கட் வீரர் சச்சின், மென்பந்தாட்ட வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விவரம்: இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் தனது பிறந்த நாளை 2010ம் ஆண்டு ஜமைக்கா நாட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது மூவர்ண கொடியின் நிறத்தினாலான கேக்கை வெட்டிக் கொண்டாடியது வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
இதேபோல கிரிக்கட் வர்ணனையாளர் நடிகை மந்திரா பேடி சமீபத்தில் கிரிக்கட் நிகழ்ச்சியை வர்ணனை செய்தபோது தேசியக் கொடி வடிவிலான ஆடையை அணிந்திருந்தது வலைதளத்திலும், தொலைக்காட்சி சேனல்களிலும் வெளியாகின.
மென்பந்தாட்ட வீராங்கனை சானியா மிர்சா தொலைக்காட்சி பேட்டியின் போது தனது காலில் தேசியக் கொடி வண்ணத்திலான செருப்பை அணிந்திருந்ததும் படமாக வெளிவந்துள்ளது.
எனவே தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டது தொடர்பாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக