செவ்வாய், 10 மே, 2011
புலிகளுடனான இறுதி போரின் போது மேற்குலக இராஜதந்திரிகளின் கருத்தை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழித்தது: விக்கிலீக்ஸ்
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்குலக இராஜதந்திரிகளின் கருத்துக்களை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழித்திருப்பதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகளுடனான போரினை தற்காலிகமாகவேனும் இடைநிறுத்துவதற்கு மேற்குலக இராஜதந்திரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான 38 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சிலிருந்து பிரஸ்தாப விடயங்கள் கசிந்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அவற்றில் சில முக்கியமான விடயங்கள் கீழே தரப்படுகின்றன.
அரசாங்கப் படைகள் மூர்க்கத்தனமான முறையில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும், அது சர்வதேச கண்டனங்கள் மற்றும் சர்வதேச யுத்த விதிகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கும் வழிவகுக்குமென அன்றைய அமெரிக்காவின் இலங்கைத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின் போது 2009 மார்ச் மாதம் எச்சரித்துள்ளார்.
அதேவேளை போரில் விடுதலைப் புலிகளின் தோல்வி உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும் அழிவு ஏற்படுவதற்கு முன்னர் சரணடையுமாறு விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த ஒரேயொரு மேற்குலக நாடான நோர்வே இராஜதந்திரிகள் விடுதலைப்புலிகளிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் அதற்குச் செவிசாய்க்கவில்லை.
குருதி சிந்தப்படுவதைத் தடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சாகச் செயற்பட்டோம். எங்களால் முடிந்ததைச் செய்ததாக நாம் உணர்கின்றோம். எனினும் அவற்றையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை பார்க்கும்போது விரக்தியாக இருந்தது என்று இலங்கைக்கான அன்றைய நோர்வே தூதுவர் டோர் ஹெட்ரம் தெரிவித்துள்ளார்.
2009 மே மாதம் போர் வலயத்திற்குள் பொதுமக்கள் எவருமே இல்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அந்தக் கூற்று உண்மையல்ல என்பதையும் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிராபத்திற்குள் சிக்கியிருப்பதையும் எடுத்துரைக்கும் பல்வேறு அறிக்கைகள் அமெரிக்கக் தூதுவருக்குக் கிடைத்துள்ளன. அதனையடுத்து அழிவுகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிளேக் தொடர்பு கொண்டுள்ளார்.
காயப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை வெளியில் எடுத்து வருவதற்கான அனுமதியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்குமாறு ரொபேர்ட் பிளேக் கோரிக்கை விடுத்த போதும் அவ்வாறு செய்ய முடியாது என பசில் ராஜபக்ஸ கடுந்தொனியில் பிளேக்கிடம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அதே போன்று விடுதலைப்புலிகள் சரணடைவதற்கு தயாராக இருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் அப்பகுதிக்கு ஹெலிகொப்டர்களை அனுப்புமாறு கோத்தாபய ராஜபக்ஸவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது அதற்கான நேரம் தாண்டிவிட்டதாக அவர் பதிலளித்துள்ளார்.
அழிவைத் தடுப்பது தொடர்பாக கொழும்பிலிருந்த இராஜதந்திரிகள் கொண்டிருந்த கருத்தினையே உலகெங்கும் பலரும் கொண்டிருந்தனர். இவர்களில் நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் தலைவர் ஜான் எக்லண்டும் ஒருவராவார்.
மேற்கண்டவாறாக இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி மாதங்களின் நிகழ்வுகளை திகதி வாரியாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலை நோர்வேயின் aftenposten ஊடகம் விலாவரியாக தொகுத்து வெளியிட்டுள்ளது.
Labels:
பிரதான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக