திங்கள், 9 மே, 2011
எதிர்காலத்தில் பேப்பரிலான கையடக்க தொலைபேசிகள்!
கண்ணாடியிலான திரையைக்கொண்ட செல்லிடப பேசிகளைப் பயன்படுத்தி அல்லது கையடக்க தொலைபேசிகளை எடை சுமந்து அயர்ந்து விட்டீர்களா?
இந்தப் பிரச்சினைகள் விரைவில் வரலாறாக மாற்றமடையும் என கணனி விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் காலங்களில் உருவாகும் கையடக்க தொலைபேசிகள் பேப்பரைப் போன்று மெல்லியதாகவும், எடை குறைந்ததாகவும், நெகிழ்வுத்தன்மை உடையதாகவும் காணப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள கணனிக் கருத்தரங்களில் கனடா ஒன்ரியோவின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் மனித ஊடக ஆய்வு மையத்தின் பணிப்பாளர் றோயல் வெர்ட்டகால் “பேப்பர் செல்லிடப் பேசிகளை” உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளார்.
அரிசோனா மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த கையடக்க தொலைபேசிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இதனை நெகிழ்வுத்தன்மையுடைய ஐபோன் என அழைக்கின்றனர். அகலம் குறைந்த, நெகிழ்வுத்தன்மையுடைய திரை அழைப்புக்களை ஏற்படுத்தல், பாடல் கேட்டல், தகவல்களை சேகரித்தல் போன்ற செயற்பாடுகளை இந்தத் தொலைபேசியைக் கொண்டு மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமேசனின் கின்டல் ஈ ரீடர் கருவியைப் போன்று பேப்பர் செல்லிடப் பேசி தரவுகளை திரையில் கொண்டுவர இலத்திரனியல் மைகளைப் பயன்படுத்துகின்றது. எனினும், கையடக்க தொலைபேசிகள் இதுவரை காலமும் திரைக்காக கண்ணாடி பயன்படுத்தப்பட்ட போதிலும் இந்த கையடக்க தொலைபேசிகள் பேப்பர் போன்றதொரு பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடன் அட்டையின் அகலத்தைக் கொண்ட இந்த கையடக்க தொலைபேசிகள் வளைந்து கொடுக்கக் கூடியதெனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய ஐபோன்களுடன் ஒப்பீடு செய்யும் போது ஆறில் ஒரு பங்கு எடையை மட்டுமே கொண்டுள்ளது. திரையின் அளவு 4 அல்லது 3.7 அங்குலமாகும். கைக்கு அடக்கமானது மட்டுமன்றி இந்த கையடக்க தொலைபேசிகள் இயற்கைக்கும் பாதகமற்றது எனத் தெரிவிக்கப்படுகிறது. மிக மெல்லியதாகக் காணப்பட்ட போதிலும் இந்த கையடக்க தொலைபேசிகள் உறுதியானவை. மிகவும் குறைந்தளவு மின்சாரத்தையே பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பட்டன்களை அழுத்துவதற்கு பதிலாக செல்லிடப் பேசியை வளைப்பதன் மூலம் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளவும் இன்னபிற கருமங்களை ஆற்றவும் முடியும் என றோயல் வெர்ட்டகால் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் தொடர்ந்தும் தொடுகை திரை தொழில்நுட்பமே ஐபோன்களில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தத் தலைமுறை ஐபோன்? நெகிழ்வுத்தன்மையுடைய திரைகளை உருவாக்கும் ஆய்வுகள் சாவல் மிக்கதாக அமைந்துள்ளன.
ஏனைய ஸ்மார்ட்போன் விடயங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக திரையை மட்டும் நெகிழ்வுத்தன்மையுடையதாக மாற்றுவதனால் பயனில்லை. ஏனைய உதிரிப் பாகங்களிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டியது அவசியமானதாகும். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள பேப்பர் கையடக்க தொலைபேசி உத்தேச மாதிரியை தயாரிப்பதற்கு 7000 – 10000 அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக வெர்ட்டகால் குறிப்பிட்டுள்ளார்.
கணனி மற்றும் ஸ்மார்ட் போன் வகைகளை எவ்வாறெல்லாம் அணுக முடியும் என்பதனையே இந்த ஆய்வு மாதிரி வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கையடக்க தொலைபேசிகள் வர்த்தக ரீதியான பண்டமாக இன்னமும் உருவாகவில்லை. எதிர்வரும் 5 – 10 ஆண்டு காலப்பகுதியில் நெகிழ்வுத்தன்மையுடைய திரைகள் ஆய்வு கூடத்திலிருந்து சந்தைகளை நோக்கி பரிணமிக்கும் என தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தல் ஐபோன்களுக்கு பதிலாக பேப்பர் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த பேப்பர் கையடக்க தொலைபேசி மூலம் லாபமீட்ட முடியும் என எபல் நிறுவனம் கருதினால் மட்டுமே இந்த முன்னேற்றம் நிகழும்.
பாரியளவில் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் உற்பத்தி செலவு வீழ்ச்சியடையும் எனவும், இவ்வாறான நிலைமையில் சாதாரண விலைக்கு பேப்பர் கையடக்க தொலைபேசிகளை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இந்த வகை கையடக்க தொலைபேசிகள் தற்போதைக்கு சந்தையில் ஆதிக்கத்தை செலுத்தக் கூடிய சாத்தியம் குறைவு என துறைசார் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Labels:
சிறப்புச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக