வலி.வடக்கு, மாவிட்டபுரம் பகுதிக்கு விஜயம் செய்த ஈராக் தூதுவர் காட்டன் ராஹா கிளவ் அங்குள்ள மக்களின் பரிதாப நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். தன்னிடம் கைவசம் இருந்த ஒரு லட்சம் ரூபா பணத்தை தலா 3 ஆயிரம் ரூபா வீதம் அந்தக் குடும்பங்களுக்குத் தூதுவர் பகிர்ந்தளித்தார்.
வலி. வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வலித்தூண்டல், கொல்லங்கலட்டி, மாவிட்டபுரம் மற்றும் வித்தகபுரம், இளவாலை வடமேற்கு ஆகிய பகுதிகளுக்கு ஈராக் தூதுவர் காட்டன் ராஹா கிளவ், கடந்த புதன்கிழமை இரவு 7 மணியளவில் வலி.வடக்குப் பிரதேச செயலர் எஸ்.முரளிதரனுடன் சென்றிருந்தார்.
அங்கு சென்ற தூதுவர் அங்குள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களோடு அளவளாவி "உங்களுக்கு அரச உதவி கிடைக்கிறதா?, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் எந்த மட்டில் கிடைக்கின்றன'' என்று பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் நிலைமைகளை அறிந்துகொண்டார்.
அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பரிதாப நிலைகளை நோில் கண்டும், கேட்டும் அறிந்துகொண்ட ஈராக் தூதுவர், தான் மீண்டும் அப்பகுதிகளுக்கு வருவேன் என்றும் அவ்வாறு வரும்போது பல்வேறு உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளுடனேயே உங்களைச் சந்திப்பேன் என்றும் உறுதியளித்துச் சென்றார்.
0 comments:
கருத்துரையிடுக