வெள்ளி, 13 மே, 2011
காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.
பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாறு காணாத வகையில் ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம்,அராஜகம்,மணற்கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம்,நிர்வாகச் சீர்கேடு, இனத் துரோகம் ஆகியவற்றில் மலைக்கத்தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி.அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.
மக்களின் எதிர்ப்புக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தான் பெற்ற மக்களின் அதிகாரத்திற்காகவே ஆட்சி நடத்தினார் கருணாநிதி. மக்கள் எதிர்ப்பையும்,அரசியல் கட்சித்தலைவர்களின் எதிர்ப்பையும் அடக்குமுறைச் சட்டங்கள் மூலமும் காவல் துறையின் ஒடுக்குமுறைகள் மூலமும் பொது அரங்கிற்குக் கொண்டு வராமல் செய்தார். இதன் பின்னும், ஓயாத திமுக காங்கிரசு அரசுகள் ஈழத்தில் எம் மக்களை பல்லாயிரக்கணக்கில் சிங்களப் பேரினவாதம் கொன்றொழிக்க பல வகையில் பேருதவி புரிந்தன. இனப்படுகொலைக்கு எதிரான எம் மக்களின் ஒப்பாரியைக்கூட யாருக்கும் கேட்காமல் அச்சுறுத்தி தடை செய்தன.
இந்த மக்கள் விரோத,இனவிரோத ஆட்சி தொடர்ந்து நீடித்தால் என்றும் மீட்க முடியாத அபாயச் சூழலில் தமிழ்நாடு சிக்கிக் கொள்ளும் நிலைமை இருந்தது. ஆனாலும் தேர்தலில் பணபலத்துடன் மக்களை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற பாசிச ஆட்சியாளர்களின் ஆசையில் மண் அள்ளிப் போட்டிருக்கின்றார்கள் எம் மக்கள். தி.மு.க.காங்கிரசுக் கூட்டணியைப் படு தோல்வி அடையச் செய்திருக்கின்றனர்.
ஈழத்தில் நமது ரத்த உறவுகளை சிங்களன் கொன்று குவிக்க பேருதவி புரிந்த சோனியாவின் காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்த வேண்டும் என்னும் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி எடுத்தது. காங்கிரஸ் கட்சி தான் நமக்கு முதல் எதிரி. இனத்தை அழித்த காங்கிரசுக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படவேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கினோம். அதற்காக அனைத்து தொகுதியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் வீடு வீடாகச் சென்றும் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்று தீவிரப் பரப்புரை செய்தோம்.இனத்திற்காக நாம் செய்த கடமையை மக்கள் அங்கீகரித்து இன எதிரிக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.
தி.மு.கவிடம் மிரட்டிப்பெற்ற 63 தொகுதிகளில் 6 தொகுதியில் கூட வெல்லமுடியாதபடி காங்கிரசை வீழ்த்தியிருக்கிறார்கள். தமிழர்கள் வீரமும் விவேகமும் மட்டுமல்ல தன்மானமும் இனமானமும் உள்ளவர்கள் என்பதை தற்பொழுது மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர். ஈழத்தில் ரத்தம் சிந்திய யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை, இங்குள்ள தமிழர்கள் ரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள். இது நம் இனத்திற்குக் கிட்டிய வெற்றி.காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி.இனத்தின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த நாம் தமிழர் உறவுகளுக்கும் இணைந்து பாடுபட்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
இனி வரும் காலங்களில் தமிழினத்திற்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும். புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறேன்.
Labels:
இந்திய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 comments:
புதிய அரசை ‘எச்சரிக்கை’ செய்து வாழ்த்தியிருக்கிறீர்கள்.பாராட்டுகள்.
www.kadavulinkadavul.blogspot.com
புதிய அரசை ‘எச்சரிக்கை’ செய்து வாழ்த்தியிருக் கிறீர்கள். பாராட்டுகள்.
பரமசிவம்,
www.kadavulinkadavul.blogspot.com
nanri ungal karuthukku
கருத்துரையிடுக