சட்ட மன்ற தேர்தலில் தோல்வி, ஆட்சியில் தோல்வி, வளர்ச்சியில் தோல்வி, வாழ்கையில் தோல்வி என எங்கும் தோல்வி எதிலும் தோல்வி என துரத்தப்படும் உடன்பிறப்பே! இது தோல்வியல்ல, கடும் பணிசுமைகளுக்கு கிடைத்த தற்காலிக ஓய்வு.
மக்களுக்கு அயராது உழைத்துவிட்டோம் என்று ஓய்வு எடுக்க சொல்லிவிட்டனர்.சிறிது இளைப்பாறி மீண்டும் மக்கள் பணியை தொடர்வோம்.ஒய்ந்து விட்ட நாம் வீழ்ந்துவிடவில்லை.ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது.வீழ்ந்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தவர்களை வெற்றி பவனியில் அரவணைக்கும் காலம் வரும்.
விடையில்லா கேள்விகளுக்கும் பதில் "மூன்று" எழுத்து, பதிலை பகுக்கும் "அறிவு" மூன்று எழுத்து, அறிவுக்கு உரமிடும் "ஆசான்" மூன்று எழுத்து,அனைத்திற்கும் வித்திட்ட "அன்னை" மூன்று எழுத்து, அவள் ஊட்டிய ”தமிழ்” மூன்று எழுத்து, தமிழோடு மக்களுக்கு செய்யும் ”தொண்டு” மூன்று எழுத்து,அதனை சார்ந்து செய்யும் கழகத்தின் பெயர் மூன்று எழுத்து.இதை கண்டு எடுத்த ”அண்ணா” மூன்று எழுத்து.இவைகள் இணையும் சக்தியிலே ௬டும் வெற்றியும் மூன்று எழுத்து, அந்தகனியை கனியை நாம் மட்டும் சுவைத்தால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழி பொய்த்து விடும்.மாற்று கட்சியினரும் வெற்றிக்கனியை சுவைக்க நாம் தோல்விக்கு தோள் கொடுத்துள்ளோம்.
தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டோம். கழக வரலாற்றிலே, காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப்போவதில்லை, ஒப்பாரி வைத்து, ஓலமிடும் அளவுக்கு தோல்விகள் ஒன்றும் புதிதல்ல. முயன்றோம்-நின்றோம்-தோற்றோம்!முயல்வோம்-நிற்போம் -வெல்வோம்!கழகம் அழிந்துவிட்டது, கழகத்தை அழித்துவிட்டோம் என்று ஆனந்தக் ௬ச்சலிடும் அன்பர்கள் வரலாற்றை புரட்டிப்பார்க்க நினைவுபடுத்துகிறேன். தடம் புரண்ட வரலாறுகளை உலுக்கி,குலுக்கி திருத்தி இருக்கிறோம், இன்று தடம் புரண்டதையும் திருப்பி எடுத்து, திருத்தி எழுதுவோம்.
விட்டில் பூச்சிகளின் வெளிச்சத்திலே சூரியன் அழிந்து விட்டது என்பது சொல்வது,கண்ணை மூடிக்கொண்டு கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம். இந்த தோல்வி வெற்றிக்கான அழிவில்லா விதைகளை விதைத்துள்ளது.விதைக்கப்பட்ட விதைகள் உயிர் பெற்று மரமாகி விண்ணை முட்டும் அளவு வளரும் தூரம், கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள தூரத்தைப் போல நெடியதல்ல, இரவுக்கும், பகலுக்கும் இருக்கும் நேர இடைவெளியைப் போல மிகவும் குறுகியது.
கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும்.பொறுத்திரு உடன்பிறப்பே! காதுகளை ௬ர்மையாக்கி, புத்தியை தீட்டி வைத்து கொண்டு மக்கள் பணி செய்ய காத்திரு! அண்டத்தின் சுழற்சியிலே ராத்தூங்கும் நம்மோடு சூரியன் தூங்குவதில்லை. இன்னுமொரு உதயத்திற்கு காத்திரு, புது உலகம் நமக்காக காத்து இருக்கிறது சரித்திரமும், சாதனையும் படைக்க!
0 comments:
கருத்துரையிடுக