கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

உலக செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மே, 2011

பின்லேடன் உடலை எடுத்துச் சென்ற போர்க்கப்பலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி.


அல்-காய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் உடலை கடலில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்ற கார்ல் வின்சன் என்ற போர்க்கப்பலை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்கக் கமாண்டோ வீரர்கள் சுட்டுக்கொன்று அவரது உடலை ஹெலிகாப்டரில் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து பின்லேடன் உடல் கார்ல் வின்சன் போர்க் கப்பல் மூலமே கடலுக்குள் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இந்த போர்க்கப்பலை பார்ப்பதற்கு பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இதை புரிந்து கொண்ட அமெரிக்கா கப்பலைப் பார்க்க அனுமதி அளித்துள்ளது. கார்ல் வின்சன் கப்பல் இப்போது பிலிப்பின்ஸின் மணிலா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டு அதிபர் 3-வது பெனிங்கோ அகியூனோ, அவரது அமைச்சரவை சகாக்கள், முக்கிய ராணுவ அதிகாரிகள் ஆகியோர் கார்ல் வின்சன் கப்பலை சனிக்கிழமை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து சில பத்திரிகையாளர்களும் சென்று பார்வையிட்டனர். கப்பலைப் பார்வையிட வருபவர்கள் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து கப்பலுக்குள் விரிவாக ஏதும் விவாதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்கள் கார்ல் வின்சன் கப்பலை அமைதியாகப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
பின்லேடனின் உடலை எடுத்துச் சென்ற கப்பல் என்பதால் அதன் மீது அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி கோபத்தை தீர்த்துக்கொள்ள முயலலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அக்கப்பலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 16 மே, 2011

போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி

பாலஸ்தீன எல்லைப் பகுதியில் சில குழுவினர் போராட்டத்தில் ஈடுட்டனர். இந்த போராட்ட நபர்கள் மீது இஸ்ரேலிய துருப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
துப்பாக்கி தாக்குதலில் 12 பேர் இறந்தனர். ஏராளமானர்கள் காயம் அடைந்தார்கள். பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் சிரியா வழியாக கோல்டன் ஹை பகுதியில் நுழைய முயன்றனர் என இஸ்ரேல் கூறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யகு கூறுகையில்,"நமது எல்லைப் பகுதியையும் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டிய உறுதியில் உள்ளோம். அமைதி விரைவில் திரும்பும்" என்றார்.
கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பின்னர் பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் எல்லைப் பகுதியில் போராடுகிறார்கள்.
இந்த நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்பாக நடந்த எதிர்ப்பு போராட்டக் கும்பலை கலைக்க பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு இருப்பதால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகள் அமைதி காக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோல்டன் ஹை பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய துருப்பினர் மீது பாலஸ்தீன போராட்டக்காரர்கள் கற்களை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். மஜ்தால் ஷாம்ஸ் என்ற கிராமத்தின் அருகே போராட்டக்காரர்கள் வேலியை கடந்து செல்ல முயன்றனர்.
கடந்த 1967ம் ஆண்டு நடந்த 6 நாள் போரின் போது சிரியாவின் எல்லைப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. இஸ்ரேலின் அத்து மீறலை கண்டித்து தற்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஞாயிறு, 15 மே, 2011

பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய காரணத்திற்காக சர்வதேச நிதியக்குழு தலைவர் கைது

சர்வதேச நிதியக்குழு தலைவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டார். ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. 
இந்த கைது காரணமாக உயர்ந்த பதவியில் இருப்போருக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள சோசலிஸ்ட் பார்ட்டியின் தலைவராக இருப்பவர் டோமினிக் ஸ்ட்ராஸ்கான் (வயது 62) .
இவர் இந்த கட்சியின் அதிபர் வேட்பாளரும் கூட. வருகிற 2012ல் பிரான்ஸ் நாட்டின் அதிபராக கூட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இவர் நியூயார்க்கில் ஒரு பிரபல மேன்ஹாட்டன் டைம்ஸ் ஸ்கொயர் என்ற ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்தார். இந்நேரத்தில் இவரது அறைக்கு வந்த பணிப்பெண்ணிடம் வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் ரீதியாக தொந்தரவு புரிந்துள்ளார்.
இது தொடர்பாக புகார் செய்யப்பட்டதும் இவர் தப்பித்து செல்ல ஜாண் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரீஸ் புறப்பட தயாரானார். இதனையடுத்து சுற்றி வளைத்த பொலிசார் இவரை வெளியே இழுத்து கைது செய்தனர். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொலைக்காட்சியில் தோன்றிய கடாபி: சர்ச்சை தீர்ந்தது

லிபியாவில் நேட்டோ படைகளின் கடுமையான தாக்குதலை தொடர்ந்து கடாபி பற்றிய தகவல்கள் வெளியாகாமல் இருந்தன.
இந்நிலையில் திரிபோலியில் உள்ள ஒரு ஹோட்டலில் பழங்குடியின தலைவர்களை கடாபி சந்தித்து பேசியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
லிபியாவில் கடாபியை எதிர்த்து கடந்த மூன்று மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் 30ம் திகதி திரிபோலியில் உள்ள கடாபியின் வீடு மீது நேட்டோ படைகள் நடத்திய பயங்கர தாக்குதலில் கடாபியின் இளைய மகன் மற்றும் மூன்று பேர குழந்தைகள் பலியாயினர். இந்நிலையில் கடாபி உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்த சர்ச்சை நீடித்து வந்தது.
சர்ச்சையை தீர்க்கும் வகையில் கடந்த புதன்கிழமை திரிபோலியில் உள்ள ஒரு ஹோட்டலில் பழங்குடியின தலைவர்களை கடாபி சந்தித்து பேசியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
அல் ஜமாஹிரியா என்ற தொலைக்காட்சியில் பழங்குடியின தலைவர்களுடன் கடாபி உரையாடுவது போன்ற காட்சி காட்டப்பட்டது. அப்போது,"லிபியன் பழங்குடியினரின் பிரதிநிதிகள் நாம் என்பதை உலகிற்கு காட்டுவோம்" என்று கடாபி கூறினார். பதிலுக்கு கூட்டத்தில் இடம் பெற்ற பழங்குடியின பெரியவர் ஒருவர், "நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்று கடாபியை பார்த்து கூறினார்.
கூட்டத்தை முன்னிட்டு ஹோட்டலின் சில அறைகள் சீல் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஹோட்டலில் கடாபியின் தலைமையில் கூட்டம் நடைபெறுவதை அறிந்த நேட்டோ படையினர் அதன் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் ஹோட்டலின் ஜன்னல்கள் பழுதடைந்தன. லிபியா கிளர்ச்சியாளர்களுக்கு உதவ அமெரிக்கா 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்து இருந்தது. இதில் ஒரு பாகமாக முதன் முதலாக கிளர்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட உணவு பொட்டலங்கள் லிபியா வந்து சேர்ந்தன.

செவ்வாய், 10 மே, 2011

லிபியாவில் படகு மூழ்கியது: பல நூறுபேர் மரணம்

லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் உயிர் பிழைக்க படகில், தப்பிய பல நூறு பேர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக பிப்ரவரி 15 ஆம் திகதி முதல் புரடசிப் போராட்டம் நடந்திருக்கிறது. லிபியா ராணுவத் தாக்குதலில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உயிர் பிழைக்க 600 அகதிகள் படகில் ஏறி, ஐரோப்பாவை அடைய முயற்சித்தனர். இந்தப் படகு திடீரென கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர் தண்ணீரில் தத்தளித்தனர்.

அவர்கள் உயிர் பிழைக்க முடியாமல் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகில் இருந்தவர்கள் ராணுவ ஹெலிகொப்டர் மற்றும் நேட்டோ கப்பல் அடையாளம் கண்டபோதும், படகில் இருந்த 72 பேரில் 61 பேர் தண்ணீர் தாகம் மற்றும் உணவு இல்லாததால் இறந்தனர் என கார்டியன் நாளிதழ் கூறுகிறது.

லிபியாவில் இருந்து உயிர் பிழைக்க படகில் தப்பிய மக்கள் இத்தாலியின் லாம்பெடுகா தீவுக்கு வந்தபோது விபத்தில் சிக்கினர். லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் படகில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திரிபோலியர் மார்ச் 25 ஆம் திகதி புறப்பட்ட சிறியப்படகு, எரிபொருள் இல்லாமல் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 7 மே, 2011

வெளிவராத பின்லேடனின் இறந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது (படங்கள் இணைப்பு)

கடந்த திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணிக்கு அமெரிக்க துறுப்புகள் பின்லேடன் மறைந்திருந்த பண்ணை விட்டுமேல் தாக்குதலை நடத்தியதாக தற்போது செய்திகள் துல்லியமாக வெளியாகியுள்ளது. சுமார் 40 நிமிடத்தில் நடந்து முடிந்த இத் தாக்குதலில் பின்லேடன் நிராயுதபாணியாக இருந்தவேளை அவரை தாம் சுட்டுக்கொண்றோம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.அத்தோடு பின்லேடனின் படங்களையும் தாம் வெளியிடவில்லை என அமெரிக்க அறிவித்திருந்தது. இருப்பினும் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டவேளை அவரின் புகைப்படங்கள் சில வெளியானபோது அவை போலியானவை என பின்னர் தெரியவந்தது யாவரும் அறிந்ததே.

தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில், அவரின் தலையில் சூடுபட்டு இருப்பது தெரிகிறது. அவருடன் சேர்ந்து மேலும் 2வரின் உடலங்கள் அடங்கிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இவை அனைத்தையும் தாம் அமெரிக்க சிறப்புப்படையினரிடம் இருந்து பெற்றதாக, ஆங்கில இணையம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் தற்போது வெளியான புகைப்படங்களை சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒசாமா தாக்கப்பட்ட நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய உளவாளி



அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்தவாரு நேரடியாகப் பார்வையிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் இடம்பெறும் காட்சிகளை வெள்ளை மாளிகையின் "சிடுவேஷன்" அறையில் இருந்து ஜனாதிபதி ஒபாமா, உப ஜனாதிபதி, ராஜாங்கச் செயலாளர் உட்பட இன்னும் சில முக்கிய பிரமுகர்களும் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
இதில் ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தவிர இன்னும் ஒரு பெண் படத்தின் பின்னால் காணப்படுகின்றார். கருமையான கூந்தலுடன் காணப்படும் இந்தப் பெண் யார்? என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
அமெரிக்காவின் உயர்மட்ட முக்கியப் பிரமுகர்கள் கூடும் அந்த அறைக்குள் அவர் எப்படி வந்தார்? ஹிலாரியைத் தவிர அங்கிருந்த ஒரே பெண் அவர் தான். இவர் 40 வயதுக்கும் குறைவானவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அந்தப் படத்தில் இவரின் பெயர் ஓட்ரி டொமஸன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இவர் யார்? ஏன் அங்கு வந்தார்? என விளக்கமளிக்க முடியாமல் உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் ஒரு உயர் மட்ட உளவாளியாக இருக்கலாம் என்று சில புலனாய்வு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அந்தப் பெண் படத்தில் தோன்றி தனது முகத்தைக் காட்டியுள்ளதால் அவர் இப்போது ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சுட்டுக் கொன்றதும் பின்லேடனை படி வழியாக இழுத்துச் சென்றனர்: ஒசாமாவின் மனைவி தகவல்

பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் ஆடம்பர பங்களாவில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய பின்லேடனை அமெரிக்க வீரர்கள் கூட்டுக் கொன்றனர்.
அந்த பங்களாவில் பின்லேடன் மற்றும் குழந்தைகளுடன் 5 ஆண்டுகளாக ரகசியமாக வாழ்ந்து வந்தார். தாக்குதல் சம்பவத்தில் தப்பிய பின்லேடனின் மனைவிகளில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து விவரித்தார்.
அவர் கூறியதாவது: பின்லேடன் அபோதாபாத் பங்களாவில் மாடியில் தங்கி இருந்தார். அதில் 3 அறைகள் உள்ளன. அமெரிக்க வீரர்கள் திடீர் என்று மாடியில் இறங்கி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பின்லேடன் உயிர் இழந்ததும் அவரது உடலை மாடிப்படிகள் வழியாக தரதரவென்று இழுத்துக் கொண்டு கீழே வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதே போல் பின்லேடனின் மகளும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் தனது தந்தையை அமெரிக்க வீரர்கள் கொன்று மாடிப்படிகள் வழியே இழுத்து வரப்பட்டதை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பின்லேடன் அமெரிக்காவை பயமுறுத்தி வைத்திருந்தாலும் அவரது மறைவுக்கு பிறகு அவரது குழந்தைகள் எந்த நாட்டிலும் குடியுரிமை இன்றி இருக்கிறார்கள். 1994ம் ஆண்டு சவுதி அரேபியா, பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்து விட்டது.
அதன் காரணமாக அவரின் பிள்ளைகள் குறிப்பிட்ட நாட்டின் குடியுரிமை இல்லாது இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி கூறினார். பின்லேடனின் குழந்தைகள் ராவல்பிண்டியில் உள்ள ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 4 வயது முதல் 12 வயது வரை இருக்கும்.

வெள்ளி, 6 மே, 2011

ஆபரேஷன் ஜெரோனிமோ நடந்தது எப்படி? ஆப்கானிஸ்தான் டூ அபோதாபாத்

அல் -குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் மீது நடத்திய தாக்குதலுக்கு "ஆபரேஷன் ஜெரோனிமோ' என, அமெரிக்க அதிகாரிகள் பெயரிட்டிருந்தது தெரிந்துள்ளது. தாக்குதலின் முழு விவரமும், தற்போது தெரியவந்துள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பத்திரிகைகளில் இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:அல் - குவைதா தலைவர் ஒசாமா பதுங்கியிருந்த இடத்தில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தயாரானதும், அதற்கு "ஆபரேஷன் ஜெரோனிமோ' என பெயரிடப்பட்டது. ஜெரோனிமோ என்பது, ஒசாமாவை குறிக்கும் சங்கேத வார்த்தை.தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்காவால் அனுப்பப்பட்டவர்கள், அமெரிக்க கடற்படையின்,"நேவி சீல்' என்ற பிரிவைச் சேர்ந்த சிறப்புப் படையினர். இந்த ஆபரேஷனில் 79 வீரர்கள் பங்கேற்றனர். இவர்கள், நான்கு ஹெலிகாப்டர்களில் சென்று, தாக்குதல் நடத்தினர். ஆப்கனில் உள்ள ஜலலாபாத் என்ற இடத்தில் இருந்து, ஹெலிகாப்டர்கள் மூலமாக, தாக்குதல் நடத்த அபோதாபாத் சென்றனர். பாகிஸ்தான் செல்வது, தாக்குதலை நடத்தி முடித்து விட்டு, வெற்றிகரமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறுவது ஆகியவை தான், "நேவி சீல்' படையினரின் ஒரே குறிக்கோள்.தாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது, பாகிஸ்தான் அரசுக்கு தெரியக் கூடாது என்பதில், அவர்கள் தெளிவாக இருந்தனர். அதுபோலவே, தாக்குதல் நடந்து முடியும் வரை, பாகிஸ்தானுக்கு இதுபற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.

வெள்ளை மாளிகை பரபரப்பு:தாக்குதல் நடந்த அன்று, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரிகளின் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் பணிகளும் ரத்து செய்யப்பட்டன. வெள்ளை மாளிகையில் உள்ள ரகசிய ஆலோசனை அறையில், அதிபர் ஒபாமா, சக அதிகாரிகளுடன் நிலைமையை கண்காணித்துக் கொண்டிருந்தார்."நேவி சீல்' படையினரின் ஒவ்வொரு நகர்வையும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ., இயக்குனர் லியோன் பனெட்டா, வீடியோ திரையில் தோன்றி, அதிபருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.தாக்குதல் நடந்த போது, பாகிஸ்தானில் நள்ளிரவு 1.00 மணி. நான்கு ஹெலிகாப்டர்களில் சென்ற, கமாண்டோ படையினர், அபோதாபாத்தில் உள்ள ஒசாமாவின், உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட வீட்டு வளாகத்துக்குள் தரை இறங்கினர். ஹெலிகாப்டர் இறங்குவது, யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். இதனால், ஹெலிகாப்டரில் இரைச்சல் அளவு குறைக்கப்பட்டது.

அதிரடி தாக்குதல்:ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய வீரர்கள், அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அப்போது, உள்ளே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், கமாண்டோ படையினரை நோக்கி, சரமாரியாக சுட்டனர்.இரு தரப்பினருக்கும் இடையே, கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடித்து, கமாண்டோ படையினர் உள்ளே நுழைந்தனர்.ஒரு பயங்கரவாதி, அங்கிருந்த பெண் ஒருவரை, தனக்கு பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்திக் கொண்டான். அமெரிக்க படையினர் சுட்டதில், அடையாளம் தெரியாத அந்த பெண்ணும், பயங்கரவாதியும் பலியாகினர்.அந்த வீட்டில் இருந்த மேலும் இரண்டு பேரும் சண்டையில் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வீட்டில் மீதம் இருப்பது ஒரே ஒரு நபர் தான் என்றும், அந்த நபர் ஒசாமா தான் என்பதையும், கமாண்டோ படையினர் உறுதி செய்து கொண்டனர்.

ஒசாமா பலி:அந்த வீட்டின் மூன்றாவது மாடியில் பதுங்கியிருந்த ஒசாமாவை, கமாண்டோ படையினர் கண்டுபிடித்தனர். சல்வார் கமீஸ் உடையை உடுத்தியிருந்த ஒசாமா, கமாண்டோ படையினரை நோக்கி சுட்டதை அடுத்து, அவரை நோக்கி, கமாண்டோ வீரர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில், ஒசாமாவின் இடது கண்ணுக்கு மேல் பகுதியில் குண்டு பாய்ந்து, அவர் கீழே சாய்ந்தார்.

அந்த 40 நிமிடம்:40 நிமிட "ஆபரேஷன் ஜெரோனிமோ' முடிவுக்கு வந்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில், ஒசாமாவின் மகன் ஹம்சா மற்றும் அந்த வீட்டில் வேலை பார்த்தவர்களும் அடக்கம் என்பதை, அமெரிக்க படையினர் உறுதி செய்து கொண்டனர்.கமாண்டோ படை வீரர் ஒருவர், ஒசாமாவின் சடலத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டார். தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விட்டு திரும்பிய கமாண்டோ படையினருக்கு, நெருக்கடி காத்திருந்தது.அவர்கள் வந்த ஹெலிகாப்டரில், ஒன்று இயங்கவில்லை. இந்த ஹெலிகாப்டர் தவறானவர்களின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, அங்கிருந்து புறப்படுவதற்கு முன், அந்த ஹெலிகாப்டரை குண்டு வீசி தகர்த்தனர். ஒசாமா வீட்டிலிருந்த ரகசிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஆகியவற்றையும், கமாண்டோ படையினர் எடுத்துச் சென்றனர்.ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததை, சி.ஐ.ஏ., இயக்குனர் பனெட்டா, அதிபர் ஒபாமாவுக்கு தெரிவித்தார். இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதும், அதை அதிகாரப்பூர்வமாக, அதிபர் ஒபாமா அறிவித்தார். இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

"டைம்' பத்திரிகை அட்டையில் ஒசாமா : * அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல "டைம்' பத்திரிகை, விரைவில், ஒசாமா பின்லாடன் படத்துடன் கூடிய புத்தகத்தை வெளியிட போவதாக அறிவித்துள்ளது. பின்லாடனின் படத்தின் பின்னணியில், சிவப்பு நிறத்தில் "எக்ஸ்' போடப்பட்டிருக்கும் என, அந்த பத்திரிகை கூறியுள்ளது.
* இதேபோல், மே மாதம் முதல் தேதி சர்வாதிகாரி ஹிட்லர் இறந்த நாள். அதை நினைவுபடுத்தி, ஹிட்லர் படம் 1945ல், அட்டையில் இடம் பெற்றது. பின்பு 2003, ஏப்ரலில், சதாம் உசேன் இறந்த போது அவரது படத்தை "டைம்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஒசாமாவை சுட்டது யார்? ஒசாமா பின்லாடனுடன், அமெரிக்க வீரர்கள், 40 நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தினர் என்றும், அப்போது, அவரது தலையில், ஒன்று அல்லது இரண்டு குண்டுகள் பாய்ந்து அவர் இறந்து போனார் என்றும், அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஆனால், பாகிஸ்தானில் இருந்து வெளிவரும், "டான்' பத்திரிகையில் இதுகுறித்து கூறப்பட்டிருப்பதாவது:பின்லாடன் உடல், அமெரிக்க வீரர்களால் எடுத்துச் செல்லப்பட்ட பின், அந்த வீட்டுக்குச் சென்று சோதனையிட்ட அதிகாரி ஒருவர், இது குறித்து கூறுகையில், "அவர் அருகில் இருந்து சுடப்பட்டு செத்தவராகத் தெரியவில்லை. அவரது பாதுகாப்பு வீரர் ஒருவரால் சுடப்பட்டிருக்கலாம். அமெரிக்காவின் கையில், அவர் சிக்காமல் இருப்பதற்காக, இப்படி செய்திருக்கலாம்' என தெரிவித்தார்.இவ்வாறு, "டான்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

* சண்டை முடிந்தவுடன், பின்லாடன் உடலை மட்டும் அமெரிக்க வீரர்கள் எடுத்துச் சென்றனர்.
* அவருடன் பலியான ஒரு பெண் அவரது மகன் மற்றும் பணியாளர்கள் உடல்களை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர். பலியான பெண் பின்லாடனின் மனைவி இல்லை என, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
* பின்லாடனின் ஒரு பாதுகாப்பு வீரரின் உடல், வளாகத்தின் உள்ளும், மற்ற இருவரின் உடல்கள், வீட்டின் உள்ளும் கண்டெடுக்கப்பட்டன.
* காயம்பட்ட மற்றொரு பெண், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* அபோதாபாத் வீட்டில் இருந்த மற்ற ஒன்பது சிறுவர்கள் மற்றும் சிறுமியர் பாக்., போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* இவர்கள் அனைவரும், இரண்டில் இருந்து, 12 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் பின்லாடனின், 11 வயது மகளும் உண்டு.
* சண்டை துவங்குவதற்கு முன், முதலில் வந்த ஹெலிகாப்டர், பின்லாடன் தரப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வந்த தகவலை மறுத்துள்ள பாக்., அதிகாரிகள், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.
* அபோதாபாத் வீட்டை ஐந்தாண்டுகளுக்கு முன்பு கட்டிய, வாசிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த நபரை, பாக்., பாதுகாப்பு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
* அபோதாபாத் வீட்டில் நடந்த சண்டையை, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள, "சிச்சுவேஷன்' அறையில் இருந்தபடி ஒவ்வொரு நிமிடமும் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
* அமெரிக்க வீரர்கள், அந்த வீட்டை முழுமையாகத் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்த போது, ஒபாமா உட்பட அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
* தாக்குதல் நடவடிக்கை முடிந்த உடன், "நாம் அவரைப் பிடித்து விட்டோம்' என, ஒபாமா அருகில் இருந்தவர்களிடம் சொன்னாராம்.
* அபோதாபாத் வீட்டை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து வைத்திருந்த அமெரிக்க அதிகாரிகள், அதைப் போலவே ஒரு செட்டிங் அமைத்து அங்கு வீரர்களுடன், ஏப்ரல் மாதத்தில் பலமுறை ஒத்திகை நடத்திப் பார்த்துள்ளனர்.
* "பின்லாடனின் டி.என்.ஏ., ஆய்வறிக்கை, 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரங்கள், பின்லாடன் மற்றும் அவரது உறவினர்களின் டி.என்.ஏ.,க்களுடன் பொருந்திப் போகிறது' என, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
* பின்லாடன் தங்கள் நாட்டில் தான் இருந்திருக்கிறான் என்பதைக் கூட, பாகிஸ்தான் அரசால் கண்டுபிடிக்க முடியவில்லையே என, அந்நாட்டுப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
* "பாக்., அரசு, தன் மண்ணில் வாழ்ந்த பின்லாடனைத் தானே வேட்டையாடியிருக்க வேண்டும். அல்-குவைதாவால் அமெரிக்கா மட்டுமல்லாமல் பிற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன' என்று ஒரு பத்திரிகை கூறியுள்ளது.
* "பல ஆண்டுகளாக பாக்., அரசு மறுத்து வந்த போதிலும் இறுதியில் பின்லாடன் பாகிஸ்தானில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். இன்னும் பல நகரங்களில் முக்கிய பயங்கரவாதிகள் தங்கியிருக்கக் கூடும்' என, மற்றொரு பத்திரிகை தெரிவித்துள்ளது.
* பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது தூதரகத்தையும், பெஷாவர், லாகூர், கராச்சி ஆகிய நகரங்களில் இருந்த துணைத் தூதரகங்களையும் அமெரிக்கா இழுத்து மூடிவிட்டது.

அணுரசாயன குண்டுகள் வீசி தாக்குதல் நடத்த திட்டம்: இன்டர்போல் உலகநாடுகளுக்கு எச்சரிக்கை

அமெரிக்க இராணுவ நடவடிக்கையால் பின்லேடன் ‌கொல்லப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் உஷார்ப்படுத்தும்படி சர்வதேச பொலிஸ் ஏஜென்சியான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகநாடுகளில் உள்ள தூதரகங்கள், முக்கிய வர்த்தக நகரங்களில் பாதுகாப்பினை பலப்படுத்தும்படியும் கூறியுள்ளது.

இது குறித்து இன்டர்போல் அமைப்பின் பொதுச்செயலாளர் ‌ரொனால்டு நோபல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பின்லேடன் கொல்லப்பட்ட போதிலும் அவரது தலைமையிலான அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தக்கூடும்.

ஏற்கனவே பின்லேடனை பிடிக்க முற்பட்டால்ஐரோப்ப முழுவதும் அணுரசாயண குண்டு வீசப்படும் என அல்கொய்தா அமைப்பின் சீனியர் தலைவர் எச்சரித்திருந்ததும், அச்செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டதும் மேற்‌கோள்காட்டப்பட்டது.

எனவே அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் உள்ள தூதரகங்கள், வர்‌த்தக நகரங்கள், அணு உலைகள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

ஒசாமாவின் புகைப்படம் வெளியிட முடியாது: ஒபாமா

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை உறுதி செய்யும் புகைப்படங்களை வெளியிடப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒபாமாவின் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜே கார்னேய் அறிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான அடையாளமாக இருக்கக் கூடாது என இம்முடிவை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில், பாகிஸ்தான் இராணுவத்தினரால் சில முக்கிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வியாழன், 5 மே, 2011

பாகிஸ்தான் ராடார்களை ஏமாற்றிய அமெரிக்கா – சரணடைய மறுத்த ஒசாமா

 பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள அபோடாபாத் பகுதியில் வைத்து அல்கைடா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட சிறப்பு படை நடவடிக்கையில் அமெரிக்க கடற்படையின் சீல் (SEAL) கடற்படை கொமோண்டோக்கள் பங்கெடுத்ததாக அமெரிக்க படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கான் தளம் ஒன்றில் இருந்து இரண்டு உலங்குவானூர்திகளில் புறப்பட்ட 40 சீல் சிறப்புப்படை கொமோண்டோக்களே இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கையின் தகவல்கள் வெளியில் தெரியாது இருப்பதற்காக ஆப்கானில் இருந்து புறப்பட்ட உலங்குவானூர்திகள் பாகிஸ்தான் இராணுவத்தினரின் ரடார் திரைகளில் சிக்காது மிகவும் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளன.

நள்ளிரவு 12.55 மணியளவில் பின்லாடன் தங்கியிருந்த மூன்று மாடி கட்டிடத்தின் கூரையில் கொமோண்டோக்களை உலங்குவானூர்திகள் தரையிறக்கியபோது, கூரையில் காவல் கடமையில் இருந்த அல்கைடா உறுப்பினர்கள் மேற்கொண்ட தாக்குதலில் உலங்குவானூர்தி ஒன்று சேதமடைந்துள்ளது.

சேதமடைந்த உலங்குவானூர்தியை தரையில் கைவிட்ட கொமோண்டோக்கள் மிக வேகமாக தமது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். வீழ்ந்த உலங்குவானூர்தி 14 அடி உயர மதிலில் தொங்கி கிடப்பதை காணக்கூடியதாக உள்ளது.

கூரையில் இருந்த அல்கைடா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், கொமோண்டோக்கள் மிக விரைவாக கட்டிடத்தின் அறைகளுக்குள் புகுந்து கொண்டனர்.

பல அறைகளைக்கொண்ட அந்த கட்டிடத்தொகுதியின் ஒரு அறைக்குள் புகுந்த கொமோண்டோ வீரர் ஒருவர் ஒசாமாவை அடையாளம் கண்டுகொண்டார். அது ஒசாமாவின் படுக்கை அறை.

முதலில் சரணடையுமாறு உத்தரவுகளை பிறப்பித்த கொமோண்டோ படை வீரர், ஒசாமா சரணடைய மறுத்து ஆயுதத்தை தேடியபோது, அவரின் தலையில் இரு தடவைகைள் சுட்டுள்ளார்.

எனினும் ஒசாமாவை கட்டாயம் கைது செய்யவேண்டும் என்ற திட்டம் அமெரிக்காவிடம் இருக்கவில்லை. ஏனெனில் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் ஒசாமாவை அமெரிக்கா தப்பிக்க விட்டிருந்தது.

அவரை உயிருடன் பிடிப்பதற்கு முயன்றபோதே அவர் தப்பிச் சென்றிருந்தார். எனவே இந்த தடவை அவரை பிடிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என அமெரிக்க கொமோண்டோக்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கிய பின்லாடன், 1989 களுக்கு முன்னர் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத்திற்கு பெரும் தலையிடியாக விளங்கியிருந்தார்.

சவுதி அரேபியாவில் மிகவும் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த அவர் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர் என அப்துல் பரிஸ்ஹான் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார். “அல்கைடாவின் இரகசிய வரலாறு” என்ற புத்தகத்தை பரிஸ்ஹான் எழுதியிருந்தார்.

ஆப்கான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இரு பெரும் போர்களை ஏற்படுத்திய பின்லாடன், 4,000 அமெரிக்கப் படையினரினதும், 300 பிரித்தானியா படையினரினதும் மரணத்திற்கும், பல பில்லியன் டொலர் செலவுக்கும் காரணமானவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவுக்கு எதிராக பின்லாடன் மேற்கொண்ட நேரடியான தாக்குதல்கள் மூன்று.

• நைரோபில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான குண்டுத்தாக்குதல் (1998) – 244 பேர் பலி.

• யேமன் கடற்பகுதியில் தரித்து நின்ற யூ எஸ் எஸ் கோல் என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல் மீதான தாக்குதல் (2000) – 17 ஈரூடக்ப்படையினர் பலி.

• அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்ரகன் மீதான தாக்குதல் (2001) – 3,000 இற்கு மேற்பட்டவர்கள் பலி.

இதனிடையே, பாகிஸ்தான் அரசுக்கு தெரியாது பின்லாடன் பாகிஸ்தான் தலைநகரத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள நகரத்தில் தங்கியிருக்க முடியாது எனவும், பின்லாடன் தங்கியிருந்த வீட்டுக்கு அண்மையில் பாகிஸ்தான் இராணுவ பயிற்றிக் கல்லூரி இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவல்களை இந்திய ஊடகங்கள் முதன்மைப்படுத்தியபோதும், அதனை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயரும், அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டனும் மறுத்துள்ளனர்.

அல்கைடாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் 30,000 மக்களையும், 5,000 படையினரையும் இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதும், தனது தொழில்நுட்டபத்தின் உதவியுடன், பின்லாடனின் இருப்பிடத்தை அறிந்து அவர் மீதான நடவடிக்கைகயை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ள அமெரிக்க, உலகின் இராணுவ வலிமைமிக்க நாடாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மரபுவழிப் படையணியுடன் மோதுவது இலகுவானது. ஆனால் ஒரு சில தனிப்பட்ட நபர்களை தேடுவது என்பது ஒரு வைக்கோல் கும்பலுக்குள் ஒரு வைக்கோலை தேடுவது போன்றது.

ஆனாலும் அமெரிக்கா அதில் வெற்றிகண்டுள்ளது, மேற்குலகத்தின் செல்iவாக்கையும், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போகும அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் செல்வாக்கையும் இந்த நடவடிக்கை உயர்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

ஒசாமாவைச் சுட்டதில் புதிய சர்ச்சை!

அமெரிக்காவுக்கே சவால் விட்ட ஒசாமா பின்லேடன் தந்திரமாக விசேட படைகளின் மூலம் கொல்லப்பட்டதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியானது..அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் தனது மெய்ப்பாதுகாவலர் ஒருவரால் சுடப்பட்டிருக்கக் கூடும் என்கிற ரீதியில் பாகிஸ்தானிய பத்திரிக்கை ஒன்று கருத்துத் தெரிவித்துள்ளது.. 

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் பகுதியில் 5 ஆண்டு காலமாக பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க சிறப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்னதாக அறிவித்திருந்தார்.
அபோதாபாத்தில் அமெரிக்க படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சண்டை குறித்து அமெரிக்க அதிகாரிகள் விளக்கமளித்தும் உள்ளனர்.

பெண் ஒருவரை மனித கேடயமாக வைக்க முயன்ற ஒசாமாவை தங்கள் படையினர் சுட்டு வீழ்த்தியதாக குறிப்பிட்டிருந்தனர். இப்படியான செய்திகள் வெளியாகியுள்ள இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த டான் (dawn) நாளிதழ் வெளியிட்ட செய்தி ஒன்று, ஒசாமாவை சுட்டது அமெரிக்கப் படைதானா என்ற சந்தேகத்தை ஆழமாக எழுப்பியுள்ளது.

(குறித்த பத்திரிகைச் செய்தி இவ்வாறு தொடர்கின்றது: Was Osama killed by US troops or his own guard?) 

அமெரிக்க சிறப்புப் படையினர் ஹெலிகாப்டரில் வந்து நள்ளிரவில் தாக்குதல் நடத்திய அடுத்த சில நிமிடங்களில், சம்பவ இடத்தைப் பார்த்த அதிகாரி ஒருவர் கூறிய விடயங்களின் அடிப்படையில் அந்தச் செய்தியில் ஆராயப்பட்டுள்ளது. 
தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த பாகிஸ்தான் அதிகாரி, "துப்பாக்கிச் சண்டை நடந்தச் சூழலை வைத்துப் பார்க்கும் போது, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், ஒசாமாவை மிக நெருக்கமாகச் சென்று, அவரது தலையில் ஒற்றைத் துப்பாக்கிக் குண்டால் சுட்டு வீழ்த்தியிருக்க சாத்தியமில்லை. 

தங்களால் தப்பமுடியாத சூழலை உணர்ந்து, ஒசாமாவே தனது பாதுகாவலரைக் கொண்டு துப்பாக்கியால் சுட வைத்திருக்கக் கூடும்,' என்று அந்த அதிகாரி விவரித்ததாக அப்பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒசாமாவின் பாதுகாவலர்கள் மூவரும் சுட்டு வீழ்த்தப்பட, பின் லேடனின் உடலை மட்டும் கைப்பற்றிச் சென்றிருக்கிறது, அமெரிக்கப் படை. 

ஒசாமா பின் லேடன் சடலத்தின் படங்களையோ அல்லது வீடியோவை அமெரிக்கா இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடாத நிலையில், பாகிஸ்தானின் பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது..

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

இளவரசர் திருமணம்: பரிசை நன்கொடையாக அளிக்க தனி இணையதளம் உருவாக்கம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கதே மிடில்டன் திருமணம் எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது.
திருமண பரிசை அளிக்க விரும்பும் நபர்கள் தாங்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் இளவரசர் வில்லியம்.
நிலநடுக்கத்தால் பாதித்தவர்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள், ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கான சங்கம், வனவிலங்கு பாதுகாப்பு என 26 அறக்கட்டளைகளை வில்லியம் மற்றும் அவரது சகோதரர் ஹேரி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
திருமண பரிசை அளிக்க விரும்புபவர்கள் தங்களுக்கு பிடித்த அறக்கட்டளையை ஒன்றை தெரிவு செய்து அதற்கு நன்கொடை அளிக்கலாம். இதற்கென தனி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் யூரோ, டொலர், பவுண்ட் போன்ற நாணயங்களில் நன்கொடை அளிக்கலாம்.

ராணுவ தளங்கள் மீது குண்டு வீச இத்தாலி முடிவு

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை ராணுவம் கொன்று குவிக்கிறது.
எனவே மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களம் இறங்கி உள்ளன. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் ராணுவமும் உள்ளது.
அதில் பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவ போர் விமானங்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இத்தாலி ராணுவம் இதுவரை தாக்குதலில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் இத்தாலியின் விமானப்படை போர் விமானங்களும் கடாபியின் ராணுவ தளங்கள் மீது குண்டு வீச முடிவு செய்துள்ளது.
இது குறித்து இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.
அப்போது கடாபியின் ராணுவ தளங்களின் மீது மட்டும் இத்தாலி போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் என அறிவித்தார். இரக்கமின்றி கொன்று குவிக்கும் கடாபி ராணுவத்திடம் இருந்து பொதுமக்களை காப்பாற்றவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதுவும் உடனடியாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்த உள்ளது. இதற்கான அறிக்கையை பிரதமர் பெர்லுஸ்கோனி அலுவலகம் வெளியிட்டது.