கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வெள்ளி, 6 மே, 2011

ஆபரேஷன் ஜெரோனிமோ நடந்தது எப்படி? ஆப்கானிஸ்தான் டூ அபோதாபாத்

அல் -குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் மீது நடத்திய தாக்குதலுக்கு "ஆபரேஷன் ஜெரோனிமோ' என, அமெரிக்க அதிகாரிகள் பெயரிட்டிருந்தது தெரிந்துள்ளது. தாக்குதலின் முழு விவரமும், தற்போது தெரியவந்துள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பத்திரிகைகளில் இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:அல் - குவைதா தலைவர் ஒசாமா பதுங்கியிருந்த இடத்தில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தயாரானதும், அதற்கு "ஆபரேஷன் ஜெரோனிமோ' என பெயரிடப்பட்டது. ஜெரோனிமோ என்பது, ஒசாமாவை குறிக்கும் சங்கேத வார்த்தை.தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்காவால் அனுப்பப்பட்டவர்கள், அமெரிக்க கடற்படையின்,"நேவி சீல்' என்ற பிரிவைச் சேர்ந்த சிறப்புப் படையினர். இந்த ஆபரேஷனில் 79 வீரர்கள் பங்கேற்றனர். இவர்கள், நான்கு ஹெலிகாப்டர்களில் சென்று, தாக்குதல் நடத்தினர். ஆப்கனில் உள்ள ஜலலாபாத் என்ற இடத்தில் இருந்து, ஹெலிகாப்டர்கள் மூலமாக, தாக்குதல் நடத்த அபோதாபாத் சென்றனர். பாகிஸ்தான் செல்வது, தாக்குதலை நடத்தி முடித்து விட்டு, வெற்றிகரமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறுவது ஆகியவை தான், "நேவி சீல்' படையினரின் ஒரே குறிக்கோள்.தாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது, பாகிஸ்தான் அரசுக்கு தெரியக் கூடாது என்பதில், அவர்கள் தெளிவாக இருந்தனர். அதுபோலவே, தாக்குதல் நடந்து முடியும் வரை, பாகிஸ்தானுக்கு இதுபற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.

வெள்ளை மாளிகை பரபரப்பு:தாக்குதல் நடந்த அன்று, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரிகளின் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் பணிகளும் ரத்து செய்யப்பட்டன. வெள்ளை மாளிகையில் உள்ள ரகசிய ஆலோசனை அறையில், அதிபர் ஒபாமா, சக அதிகாரிகளுடன் நிலைமையை கண்காணித்துக் கொண்டிருந்தார்."நேவி சீல்' படையினரின் ஒவ்வொரு நகர்வையும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ., இயக்குனர் லியோன் பனெட்டா, வீடியோ திரையில் தோன்றி, அதிபருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.தாக்குதல் நடந்த போது, பாகிஸ்தானில் நள்ளிரவு 1.00 மணி. நான்கு ஹெலிகாப்டர்களில் சென்ற, கமாண்டோ படையினர், அபோதாபாத்தில் உள்ள ஒசாமாவின், உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட வீட்டு வளாகத்துக்குள் தரை இறங்கினர். ஹெலிகாப்டர் இறங்குவது, யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். இதனால், ஹெலிகாப்டரில் இரைச்சல் அளவு குறைக்கப்பட்டது.

அதிரடி தாக்குதல்:ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய வீரர்கள், அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அப்போது, உள்ளே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், கமாண்டோ படையினரை நோக்கி, சரமாரியாக சுட்டனர்.இரு தரப்பினருக்கும் இடையே, கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடித்து, கமாண்டோ படையினர் உள்ளே நுழைந்தனர்.ஒரு பயங்கரவாதி, அங்கிருந்த பெண் ஒருவரை, தனக்கு பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்திக் கொண்டான். அமெரிக்க படையினர் சுட்டதில், அடையாளம் தெரியாத அந்த பெண்ணும், பயங்கரவாதியும் பலியாகினர்.அந்த வீட்டில் இருந்த மேலும் இரண்டு பேரும் சண்டையில் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வீட்டில் மீதம் இருப்பது ஒரே ஒரு நபர் தான் என்றும், அந்த நபர் ஒசாமா தான் என்பதையும், கமாண்டோ படையினர் உறுதி செய்து கொண்டனர்.

ஒசாமா பலி:அந்த வீட்டின் மூன்றாவது மாடியில் பதுங்கியிருந்த ஒசாமாவை, கமாண்டோ படையினர் கண்டுபிடித்தனர். சல்வார் கமீஸ் உடையை உடுத்தியிருந்த ஒசாமா, கமாண்டோ படையினரை நோக்கி சுட்டதை அடுத்து, அவரை நோக்கி, கமாண்டோ வீரர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில், ஒசாமாவின் இடது கண்ணுக்கு மேல் பகுதியில் குண்டு பாய்ந்து, அவர் கீழே சாய்ந்தார்.

அந்த 40 நிமிடம்:40 நிமிட "ஆபரேஷன் ஜெரோனிமோ' முடிவுக்கு வந்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில், ஒசாமாவின் மகன் ஹம்சா மற்றும் அந்த வீட்டில் வேலை பார்த்தவர்களும் அடக்கம் என்பதை, அமெரிக்க படையினர் உறுதி செய்து கொண்டனர்.கமாண்டோ படை வீரர் ஒருவர், ஒசாமாவின் சடலத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டார். தாக்குதலை வெற்றிகரமாக முடித்து விட்டு திரும்பிய கமாண்டோ படையினருக்கு, நெருக்கடி காத்திருந்தது.அவர்கள் வந்த ஹெலிகாப்டரில், ஒன்று இயங்கவில்லை. இந்த ஹெலிகாப்டர் தவறானவர்களின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, அங்கிருந்து புறப்படுவதற்கு முன், அந்த ஹெலிகாப்டரை குண்டு வீசி தகர்த்தனர். ஒசாமா வீட்டிலிருந்த ரகசிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஆகியவற்றையும், கமாண்டோ படையினர் எடுத்துச் சென்றனர்.ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததை, சி.ஐ.ஏ., இயக்குனர் பனெட்டா, அதிபர் ஒபாமாவுக்கு தெரிவித்தார். இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதும், அதை அதிகாரப்பூர்வமாக, அதிபர் ஒபாமா அறிவித்தார். இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

"டைம்' பத்திரிகை அட்டையில் ஒசாமா : * அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல "டைம்' பத்திரிகை, விரைவில், ஒசாமா பின்லாடன் படத்துடன் கூடிய புத்தகத்தை வெளியிட போவதாக அறிவித்துள்ளது. பின்லாடனின் படத்தின் பின்னணியில், சிவப்பு நிறத்தில் "எக்ஸ்' போடப்பட்டிருக்கும் என, அந்த பத்திரிகை கூறியுள்ளது.
* இதேபோல், மே மாதம் முதல் தேதி சர்வாதிகாரி ஹிட்லர் இறந்த நாள். அதை நினைவுபடுத்தி, ஹிட்லர் படம் 1945ல், அட்டையில் இடம் பெற்றது. பின்பு 2003, ஏப்ரலில், சதாம் உசேன் இறந்த போது அவரது படத்தை "டைம்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஒசாமாவை சுட்டது யார்? ஒசாமா பின்லாடனுடன், அமெரிக்க வீரர்கள், 40 நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தினர் என்றும், அப்போது, அவரது தலையில், ஒன்று அல்லது இரண்டு குண்டுகள் பாய்ந்து அவர் இறந்து போனார் என்றும், அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஆனால், பாகிஸ்தானில் இருந்து வெளிவரும், "டான்' பத்திரிகையில் இதுகுறித்து கூறப்பட்டிருப்பதாவது:பின்லாடன் உடல், அமெரிக்க வீரர்களால் எடுத்துச் செல்லப்பட்ட பின், அந்த வீட்டுக்குச் சென்று சோதனையிட்ட அதிகாரி ஒருவர், இது குறித்து கூறுகையில், "அவர் அருகில் இருந்து சுடப்பட்டு செத்தவராகத் தெரியவில்லை. அவரது பாதுகாப்பு வீரர் ஒருவரால் சுடப்பட்டிருக்கலாம். அமெரிக்காவின் கையில், அவர் சிக்காமல் இருப்பதற்காக, இப்படி செய்திருக்கலாம்' என தெரிவித்தார்.இவ்வாறு, "டான்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

* சண்டை முடிந்தவுடன், பின்லாடன் உடலை மட்டும் அமெரிக்க வீரர்கள் எடுத்துச் சென்றனர்.
* அவருடன் பலியான ஒரு பெண் அவரது மகன் மற்றும் பணியாளர்கள் உடல்களை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர். பலியான பெண் பின்லாடனின் மனைவி இல்லை என, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
* பின்லாடனின் ஒரு பாதுகாப்பு வீரரின் உடல், வளாகத்தின் உள்ளும், மற்ற இருவரின் உடல்கள், வீட்டின் உள்ளும் கண்டெடுக்கப்பட்டன.
* காயம்பட்ட மற்றொரு பெண், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* அபோதாபாத் வீட்டில் இருந்த மற்ற ஒன்பது சிறுவர்கள் மற்றும் சிறுமியர் பாக்., போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* இவர்கள் அனைவரும், இரண்டில் இருந்து, 12 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் பின்லாடனின், 11 வயது மகளும் உண்டு.
* சண்டை துவங்குவதற்கு முன், முதலில் வந்த ஹெலிகாப்டர், பின்லாடன் தரப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வந்த தகவலை மறுத்துள்ள பாக்., அதிகாரிகள், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.
* அபோதாபாத் வீட்டை ஐந்தாண்டுகளுக்கு முன்பு கட்டிய, வாசிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த நபரை, பாக்., பாதுகாப்பு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
* அபோதாபாத் வீட்டில் நடந்த சண்டையை, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள, "சிச்சுவேஷன்' அறையில் இருந்தபடி ஒவ்வொரு நிமிடமும் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
* அமெரிக்க வீரர்கள், அந்த வீட்டை முழுமையாகத் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்த போது, ஒபாமா உட்பட அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
* தாக்குதல் நடவடிக்கை முடிந்த உடன், "நாம் அவரைப் பிடித்து விட்டோம்' என, ஒபாமா அருகில் இருந்தவர்களிடம் சொன்னாராம்.
* அபோதாபாத் வீட்டை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து வைத்திருந்த அமெரிக்க அதிகாரிகள், அதைப் போலவே ஒரு செட்டிங் அமைத்து அங்கு வீரர்களுடன், ஏப்ரல் மாதத்தில் பலமுறை ஒத்திகை நடத்திப் பார்த்துள்ளனர்.
* "பின்லாடனின் டி.என்.ஏ., ஆய்வறிக்கை, 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரங்கள், பின்லாடன் மற்றும் அவரது உறவினர்களின் டி.என்.ஏ.,க்களுடன் பொருந்திப் போகிறது' என, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
* பின்லாடன் தங்கள் நாட்டில் தான் இருந்திருக்கிறான் என்பதைக் கூட, பாகிஸ்தான் அரசால் கண்டுபிடிக்க முடியவில்லையே என, அந்நாட்டுப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
* "பாக்., அரசு, தன் மண்ணில் வாழ்ந்த பின்லாடனைத் தானே வேட்டையாடியிருக்க வேண்டும். அல்-குவைதாவால் அமெரிக்கா மட்டுமல்லாமல் பிற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன' என்று ஒரு பத்திரிகை கூறியுள்ளது.
* "பல ஆண்டுகளாக பாக்., அரசு மறுத்து வந்த போதிலும் இறுதியில் பின்லாடன் பாகிஸ்தானில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். இன்னும் பல நகரங்களில் முக்கிய பயங்கரவாதிகள் தங்கியிருக்கக் கூடும்' என, மற்றொரு பத்திரிகை தெரிவித்துள்ளது.
* பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது தூதரகத்தையும், பெஷாவர், லாகூர், கராச்சி ஆகிய நகரங்களில் இருந்த துணைத் தூதரகங்களையும் அமெரிக்கா இழுத்து மூடிவிட்டது.

0 comments:

கருத்துரையிடுக