கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வெள்ளி, 6 மே, 2011

பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை தொடரும்: பராக் ஒபாமா


பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கு எவ்வித அறிவிப்பும் இன்றி அமெரிக்க கமாண்டோக்கள் நுழைந்ததைப் போல தேவைப்படும்போதெல்லாம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். இத்தகவலை வெள்ளை மாளிகை ஊடக செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி உறுதி செய்தார்.

வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜே கார்னி கூறியது: பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் பாகிஸ்தானில் எங்கிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இதைப் போன்ற அதிரடி நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். இதை அதிபர் பராக் ஒபாமா தெளிவுபட தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அபோட்டாபாத் நகரில் அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் மீது தாக்குதல் நடத்துவதற்காக கமாண்டோ வீரர்கள் அதிரடியாக நுழைந்தனர். பாகிஸ்தான் அரசிடம் தெரிவிக்காமல் அமெரிக்க கமாண்டோ வீரர்கள் நுழைந்தது, அந்நாட்டு இறையாண்மையை பாதிக்கும் விஷயம் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க அரசு தன்னிச்சையாக, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்தகைய நடவடிக்கையை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கேட்டதற்கு, ஒசாமா பின் லேடனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்றார் அவர்.

ஒருவேளை அமெரிக்காவிடம் அல் காய்தா தலைவர் பின் லேடன் சரணடைந்திருந்தால் அதை அமெரிக்கா ஏற்றிருக்குமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அபோட்டாபாத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் அடுத்தடுத்த நிகழ்வுகள் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இதன் தொடர் நடவடிக்கையாக ஒசாமாவை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதுவும் சட்டத்துக்கு உள்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். நியூயார்க் நகரிலிருந்த இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பிரதான மூளையாக செயல்பட்ட அல்-காய்தா இயக்கத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கமாண்டோக்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை இங்கிருந்தவாறு விளக்குவது சரியாக இருக்காது. மேலும் அவர்கள் சட்டத்திற்கு உள்பட்டுத்தான் செயல்பட்டுள்ளனர் என்றார். சதித் திட்டம் தீட்டி பல்லாயிரக்கணக்கானவர்கள் சாவுக்குக் காரணமானவருக்கு சரியான முடிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

பின் லேடனின் வீட்டை சுற்றிவளைத்து இந்த தாக்குதலை வெற்றிகரமராக நிறைவேற்றியது மிகவும் துணிச்சலான அதேசமயம், அதிக ஆபத்து நிறைந்த பணியாகும். அதை தேர்ச்சி பெற்ற கமாண்டோக்கள் சரியாக செய்து முடித்தனர். போர் விதிமுறைகள்படிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கை சட்ட விதிமீறல் என்று கூற முடியாது. அல்-காய்தா தீவிரவாத இயக்கம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. இத்தகைய பயங்கரவாத செயலை செய்த அமைப்புக்கு இத்தகைய தண்டனைதான் சிறந்த தீர்ப்பு. மேலும் அமெரிக்காவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்துள்ளார் பின் லேடன். அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொதுமக்கள் உயிரிழப்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்களின் உயிரையும் பணயம் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் முழுக்க முழுக்க போர் சட்டங்களுக்கு உள்பட்டுத்தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பின் லேடன் சரணைடைந்திருந்தால், அதற்குரிய சூழல் இருப்பின் அது ஏற்கப்பட்டிருக்கும் என்றார் ஜே கார்னி.

பின் லேடன் மரணத்துடன்,

அல் - காய்தா இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கை முற்றுப் பெறவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சுட்டிக் காட்டியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக