வெள்ளி, 13 மே, 2011
மட்டக்களப்பில் மதுபானசாலை உரிமையாளா் மீது துப்பாக்கிச் சூடு! பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கை
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட எருவில் எனும் இடத்தில் மதுபானசாலை உரிமையாளர் ஒருவர் மீது சற்று நேரத்திற்கு முன்னர் இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்துள்ள இச்சம்பவத்தில் முருகேசு இளங்குமரன் (வயது 35) என்ற வர்த்தகரே படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளங்குமரன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த இளங்குமரனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்குடியிருப்பில் உள்ள தனது மதுபானசாலைக்கு சென்று விட்டு வீடு வந்து தனது வாகனத்தை வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு இறங்கியபோது இவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மீது மூன்று துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ள நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்தேக நபர்கள் ரி.56 துப்பாக்கியை பயன்படுத்தியே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவித்தனர்.
இதேவேளை சம்பவத்தினைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி பிரதேசம் எங்கும் படையினரும் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடியின் ஒவ்வொரு வீதியிலும் படையினர் குவிக்கப்பட்டு: தீவிர தேடுதல்கள் நடாத்தப்பட்டு வருவதுடன் வீதிகளில் போகும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்கள் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
பிரதான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக