கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 10 மே, 2011

யாழின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றினால் குறையும் சாத்தியம்


யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைவடையும் சாத்தியம் உள்ளதாகவும் கருதப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இம் மாதம் 30 ஆம் திகதி மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பு தேர்தல் திணைக்களத்தினால் உறுதிபடுத்தப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றதாகவும் இதன்போது பல வழி முறைகள் பின்பற்றப்பட்டதாகவும் வாக்காளர்களாக பதிவதற்கு தவறியவர்கள் முறைப்பாடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் புதிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடையும் நிலைமையே காணப்படுகின்றது என்றும் குகநாதன் கூறினார்.

இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 8 இலட்சத்து 16 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் புதிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் 8 இலட்சத்து 16 ஆயிரமாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடைந்தால் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் குறைவடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலைமையில் யாழ். மாவட்டத்திலிருந்து ஒன்பது பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் புதிய வாக்காளர் எண்ணிக்கையின் பிரகாரம் எம்.பி. க்களின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையினால் குறைவடையலாம் என்று கருதப்படுகின்றது.

எனினும் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்ட குகநாதன் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. அதற்கிடையில் பல தடவைகள் வாக்காளர் இடாப்பு புதுப்பிக்கப்படும். அந்த வகையில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எந்த அளவில் குறைவடையும் என்று கூற முடியாது. இது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணையாளரே எடுப்பார் என்று கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக