கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வியாழன், 5 மே, 2011

பாகிஸ்தான் ராடார்களை ஏமாற்றிய அமெரிக்கா – சரணடைய மறுத்த ஒசாமா

 பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள அபோடாபாத் பகுதியில் வைத்து அல்கைடா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட சிறப்பு படை நடவடிக்கையில் அமெரிக்க கடற்படையின் சீல் (SEAL) கடற்படை கொமோண்டோக்கள் பங்கெடுத்ததாக அமெரிக்க படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கான் தளம் ஒன்றில் இருந்து இரண்டு உலங்குவானூர்திகளில் புறப்பட்ட 40 சீல் சிறப்புப்படை கொமோண்டோக்களே இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கையின் தகவல்கள் வெளியில் தெரியாது இருப்பதற்காக ஆப்கானில் இருந்து புறப்பட்ட உலங்குவானூர்திகள் பாகிஸ்தான் இராணுவத்தினரின் ரடார் திரைகளில் சிக்காது மிகவும் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளன.

நள்ளிரவு 12.55 மணியளவில் பின்லாடன் தங்கியிருந்த மூன்று மாடி கட்டிடத்தின் கூரையில் கொமோண்டோக்களை உலங்குவானூர்திகள் தரையிறக்கியபோது, கூரையில் காவல் கடமையில் இருந்த அல்கைடா உறுப்பினர்கள் மேற்கொண்ட தாக்குதலில் உலங்குவானூர்தி ஒன்று சேதமடைந்துள்ளது.

சேதமடைந்த உலங்குவானூர்தியை தரையில் கைவிட்ட கொமோண்டோக்கள் மிக வேகமாக தமது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். வீழ்ந்த உலங்குவானூர்தி 14 அடி உயர மதிலில் தொங்கி கிடப்பதை காணக்கூடியதாக உள்ளது.

கூரையில் இருந்த அல்கைடா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், கொமோண்டோக்கள் மிக விரைவாக கட்டிடத்தின் அறைகளுக்குள் புகுந்து கொண்டனர்.

பல அறைகளைக்கொண்ட அந்த கட்டிடத்தொகுதியின் ஒரு அறைக்குள் புகுந்த கொமோண்டோ வீரர் ஒருவர் ஒசாமாவை அடையாளம் கண்டுகொண்டார். அது ஒசாமாவின் படுக்கை அறை.

முதலில் சரணடையுமாறு உத்தரவுகளை பிறப்பித்த கொமோண்டோ படை வீரர், ஒசாமா சரணடைய மறுத்து ஆயுதத்தை தேடியபோது, அவரின் தலையில் இரு தடவைகைள் சுட்டுள்ளார்.

எனினும் ஒசாமாவை கட்டாயம் கைது செய்யவேண்டும் என்ற திட்டம் அமெரிக்காவிடம் இருக்கவில்லை. ஏனெனில் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் ஒசாமாவை அமெரிக்கா தப்பிக்க விட்டிருந்தது.

அவரை உயிருடன் பிடிப்பதற்கு முயன்றபோதே அவர் தப்பிச் சென்றிருந்தார். எனவே இந்த தடவை அவரை பிடிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என அமெரிக்க கொமோண்டோக்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கிய பின்லாடன், 1989 களுக்கு முன்னர் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத்திற்கு பெரும் தலையிடியாக விளங்கியிருந்தார்.

சவுதி அரேபியாவில் மிகவும் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த அவர் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர் என அப்துல் பரிஸ்ஹான் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார். “அல்கைடாவின் இரகசிய வரலாறு” என்ற புத்தகத்தை பரிஸ்ஹான் எழுதியிருந்தார்.

ஆப்கான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இரு பெரும் போர்களை ஏற்படுத்திய பின்லாடன், 4,000 அமெரிக்கப் படையினரினதும், 300 பிரித்தானியா படையினரினதும் மரணத்திற்கும், பல பில்லியன் டொலர் செலவுக்கும் காரணமானவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவுக்கு எதிராக பின்லாடன் மேற்கொண்ட நேரடியான தாக்குதல்கள் மூன்று.

• நைரோபில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான குண்டுத்தாக்குதல் (1998) – 244 பேர் பலி.

• யேமன் கடற்பகுதியில் தரித்து நின்ற யூ எஸ் எஸ் கோல் என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல் மீதான தாக்குதல் (2000) – 17 ஈரூடக்ப்படையினர் பலி.

• அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்ரகன் மீதான தாக்குதல் (2001) – 3,000 இற்கு மேற்பட்டவர்கள் பலி.

இதனிடையே, பாகிஸ்தான் அரசுக்கு தெரியாது பின்லாடன் பாகிஸ்தான் தலைநகரத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள நகரத்தில் தங்கியிருக்க முடியாது எனவும், பின்லாடன் தங்கியிருந்த வீட்டுக்கு அண்மையில் பாகிஸ்தான் இராணுவ பயிற்றிக் கல்லூரி இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவல்களை இந்திய ஊடகங்கள் முதன்மைப்படுத்தியபோதும், அதனை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயரும், அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டனும் மறுத்துள்ளனர்.

அல்கைடாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் 30,000 மக்களையும், 5,000 படையினரையும் இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதும், தனது தொழில்நுட்டபத்தின் உதவியுடன், பின்லாடனின் இருப்பிடத்தை அறிந்து அவர் மீதான நடவடிக்கைகயை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ள அமெரிக்க, உலகின் இராணுவ வலிமைமிக்க நாடாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மரபுவழிப் படையணியுடன் மோதுவது இலகுவானது. ஆனால் ஒரு சில தனிப்பட்ட நபர்களை தேடுவது என்பது ஒரு வைக்கோல் கும்பலுக்குள் ஒரு வைக்கோலை தேடுவது போன்றது.

ஆனாலும் அமெரிக்கா அதில் வெற்றிகண்டுள்ளது, மேற்குலகத்தின் செல்iவாக்கையும், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போகும அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் செல்வாக்கையும் இந்த நடவடிக்கை உயர்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

0 comments:

கருத்துரையிடுக