இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த தளபதி ரமேஸ் அவர்கள் சித்திரவதைகளின் பின்னர் சீருடையணிந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம் தற்போது வெளியான போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளது.
தளபதி ரமேஸ் அவர்கள் இராணுவத்திடம் சரணடைந்த பிறகு அவர் நெருக்கடியான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், அவர் இராணுவக் கனரக வாகனமொன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் என இரண்டு வீடியோக்கள் கடந்த காலங்களில் வெளிவந்திருந்தன.
எனினும் தளபதி ரமேஸ் எங்கே என்ற அவரது குடும்பத்தினரின் விசாரிப்புக்கு அவரைத் தாங்கள் காணவில்லை என்ற பதிலே தெரிவிக்கப்பட்டது. இருந்தும் இவர் நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் இணைந்து சரணடைந்தார் என்றே கருத்தும் கூறப்பட்டது.
இந் நிலையில் இன்று வெளியாகியுள்ள மற்றொரு தொகுதி யுத்தக் குற்றப் படங்களில் ஒருவர் ரமேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ரமேஸ் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் மிகவும் கொடுரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதை எடுத்துக் காட்டுகிறது.
இரண்டாம் இணைப்பு
மூன்று பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறப்புத் தளபதியாக பணியாற்றியிருந்தார். அவர் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.
ரமேஸிடம் விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா படையினரின் அடையாளங்கள் காணொளியில் தெளிவாக காணப்படுகின்றன.
இதனிடையே, விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளாராக கடமையாற்றிய ரமேஸ் என அழைக்கப்படும் இளங்கோவும் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனுடன் சரணடைந்திருந்தார். ஆனால் அவரின் நிலை என்ன என தெரியவில்லை.
இளங்கோ சரணடைந்ததை சிறீலங்காவின் அதிகாரி பாலிதா கோகன்ன உறுதிப்படுத்தியிருந்தார்.
கேணல் ரமேஸின் சடலத்தை அவரின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்
சிறீலங்கா இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஸின் சடலத்தை அவரின் மனைவி திருமதி வத்சலாதேவி உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர் பரா பிரபா இதனை தமிழ்நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
வெளிநாடு ஒன்றில் தங்கியுள்ள வத்சலாதேவி அனைத்துலக விசாரணைகளின் போது சாட்சியமளிக்கவும் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக