இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் அதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகளை ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சூசன் ரைஸ் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
நிபுணர் குழு மிகவும் விரிவான முறையில், தங்களது விசாரணை மற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளது வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது. அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவாக குழு வரையறுத்துப் பரிந்துரைத்துள்ளது. நீதி கிடைக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனநாயகத்தை தழைக்கச் செய்வது, மறு கட்டமைப்பு, மறுசீரமைப்பு, மனித உரிமையை நிலைநாட்டுவது தொடர்பாக அது பலவற்றைப் பரிந்துரைத்துள்ளது.
இந்த அறிக்கையை வெளிப்படையாக வெளியிட பொதுச் செயலாளர் பான் கி மூன் முடிவெடுத்ததை நாங்கள் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
போருக்குப் பின்னர் இலங்கையில் ஒளிவுமறைவற்ற வகையில் அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். புண்பட்ட தமிழ் மக்களின் புணர்வாழ்வுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மறு சீரமைப்பு, மறு குடியமர்த்தல் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
தற்போது இந்தக் குழுவின் அறிக்கை மூலம் சுயேச்சையான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பது உறுதியாகியுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற வாதம் வலுப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு விரிவான பதிலைத் தர வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் கூறியிருப்பதற்கு அமெரிக்கா தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது என்றார் ரைஸ்.
0 comments:
கருத்துரையிடுக