தகவல் தொடர்பு உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் எப்போதும் புரட்சியை உண்டு பண்ணும் விதம் வெளிவந்திருக்கின்றன. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமே ஆப்பிள் மேக் இயங்குதளங்களை காப்பி அடித்து வந்தவைதான்.
இப்படியெல்லாம் வசதி அளிக்க முடியுமா? என்று எதிர்பாரா வசதிகளுடன் பயனர்களை மகிழ்விப்பதில் ஆப்பிள் நிறுவனம் கில்லாடி. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆப்பிள் ஒரு முன்னோடி. உதாரணத்திற்கு ஐபோன் எடுத்து கொள்ளுங்கள்.
ஐபோன் வருவதற்கு முன்பு மொபைல் சந்தை எப்படி இருந்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தொடுதிரை மொபைல் என்பது கனவுதான். ஆனால் ஐபோன் வந்த பின்பு எத்தனை நிறுவனங்கள் வகை வகையான தொடுதிரை மொபைல்களை போட்டு தாக்கி வருகின்றன. மொபைல் போன் சந்தையில் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியது ஐபோன் என்றால் அது மிகையாகாது. ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துவது அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப் படுகிறது.
மடிக்கணினிக்கும், மொபைல் போன்களுக்கும் இடையில் எளிதாக எங்கும் எடுத்து செல்லும் எளிமையுடன் நெட்புக் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் சிறிய திரைகளுடன் கூடிய நெட்புக் கணினிகளை வெளியிடத் துவங்கி உள்ளன.
கூகிள் நிறுவனமும் தனது புதிய இயங்குதளமான குரோம் ஓஎஸ் ஆரம்பத்தில் நெட்புக் கணினிகளுக்காகத்தான் வெளியிடுகிறது. இவை நேட்புக் கணினிகளுக்கான சந்தை எதிர்காலத்தில் அதிகம் இருப்பதை உணர்த்துகிறது.
இந்த சந்தையையும் தனது வித்தியாசமான தயாரிப்பு மூலம் கலக்கப் போகிறது ஆப்பிள். நேற்று (ஜனவரி 27, 2010) ஐபேட் (IPad) எனும் தனது புதிய தயாரிப்பை உலகுக்கு தந்துள்ளது. தோற்றத்தில் பெரிய ஐபோன் போன்று இருக்கும் ஐபேட் 9.5 இன்ச் தொடுதிரையுடன் வருகிறது. இது Wi-Fi, Wi-Fi + 3G என்று இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டு உள்ளது.
அரை அங்குல தடிமனுடன், .68 kg எடையுடன் வரும் ஐபேட்தில் இணையத்தில் உலவுதல், இசை கேட்டல், வீடியோ பார்த்தல், ஈபுக் (Ebook) வாசித்தல் போன்ற வேலைகளை எளிமையாக செய்து கொள்ள முடியும். தொடுதிரை உள்ளதால் மற்ற கணினிகளை உபயோகிப்பதை விட ஐபேட்டை உபயோகிப்பது மிகவும் எளிது.
ஐபேட் இயங்குதளம், ஐபோனின் இயங்குதளத்தை ஒத்ததாகவே உள்ளது. செயல்முறைகள் பெரும்பாலும் ஐபோனே போன்றே உள்ளன. இது ஆப்பிளின் 1Ghz பிராசசரில் இயங்குகிறது. இதன் முழுமையான தொழிநுட்ப விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள இந்தப் பக்கத்திற்கு செல்லுங்கள். இதன் பயன்பாடுகள் குறித்து வீடியோவை பாருங்கள்.
இந்த ஐபேட் மக்களை எந்த அளவு கவரும்? கவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எடை குறைவு. எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்து செல்ல முடியும். தொடுதிரை. எளிதில் உபயோகிக்கலாம். மடியில் வைத்துக்கொண்டு புத்தகம் போல வாசித்து கொள்ளலாம். காலத்தின் வளர்ச்சியில் பெரும்பாலான மாணவர்கள் கையில் சிலேட் போன்று ஐபேட் மாதிரியான சாதனங்கள் உட்காரும் காலம் வரலாம்.
ஐபேட்டில் உள்ள குறைகளை பார்க்கலாமே. மல்டிடாஸ்கிங் (Multitaking) கிடையாது. ஒரே நேரத்தில் பல செயலிகளில் (Application) வேலை செய்ய இயலாது. வெப்கேம் இல்லாததால் வீடியோ சாட்டின் செய்ய இயலாது. 3G மாடலாக வந்தாலும் அதை நீங்கள் இணைய இணைப்புக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியுமே தரவிற போன் அழைப்புகள் (Phone Calls), குறுஞ்செய்தி (SMS) சேவை முதலியவற்றை பயன்படுத்த இயலாது.
நேரடியாக USB க்களை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது, அதற்கென தனியே அடாப்டர் தேவைப்படும். Flash சப்போர்ட் கிடையாது. இணையதளங்களில் உள்ள பிளாஷ் பகுதிகள் தெரியாது. புரியும்படி கூற வேண்டும் என்றால் இணையப்பக்கங்களில் உள்ள Flash வீடியோக்களை பார்க்க இயலாது. 16GB, 32GB, 64GB போன்ற அளவுகளில் கிடைக்கிறது. இருந்தாலும் நீங்கள் தனியே மெமரி கார்ட் வாங்கி இதனை மேம்படுத்தி (Upgrade) கொள்ள முடியாது.
ஐபேட்டின் இயங்குதளம் ஐபோன் போன்று கட்டுப்பாடுகளை உடையது. அவற்றிற்கு யார் புதிய செயலிகளை வெளியிட்டாலும் ஆப்பிள் அனுமதித்தால் மட்டுமே அவற்றை ஐபேட்டில் பயன்படுத்த முடியும். ஐபோனுக்கான கூகுளின் அருமையான பல செயலிகளை (Applications) ஆப்பிள் மட்டுறுத்தியிருக்கிறது.
எனவே ஆப்பிள் என்ன தருகிறார்களோ அவற்றை தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மற்ற கணினிகள் போன்று பிறர் செயலிகளை ஐபேட்டில் பயன்படுத்த இயலாது. உதாரணத்திற்கு நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் (Microsoft Word), பயர்பாக்ஸ் விரும்புபவர் என்றால் அதனை ஐபேட்டில் உபயோகிப்பதற்கான வாய்ப்பு கிடையாது.
விலையைப் பொறுத்தவரை மிகவும் அதிகம் இல்லை. Wifi மாடல் 499 டாலரில் இருந்தும், 3G+Wifi மாடல் 629 டாலரில் இருந்தும் கிடைக்கிறது. ஐபோன்களின் அறிமுக விலையை ஒப்பிடும் போது ஐபேட்டின் விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது.
மொத்தத்தில் ஆப்பிளின் ஐபேட் புதுமையான, கவர்ச்சிகரமான தயாரிப்பாக வந்துள்ளது. ஆனால் சூப்பர் என்று கொண்டாடுவதற்கு குறைகள் இன்றி இல்லை. இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்தால் நாம் கூறிய குறைகள் அற்ற ஐபேட் போன்ற புதிய தயாரிப்புகள் கூகிள், நோக்கியா போன்ற நிறுவனங்களிடம் இருந்து வரலாம். அதற்குள் ஐபேட் சந்தையை ஆக்ரமித்து கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.
ஞாயிறு, 17 ஜூலை, 2011
ஆப்பிளின் ஐபேட் (IPAD) விரிவான அறிமுகம்
Labels:
தொழிநுட்ப செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக